சென்னை: தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை நிராகரிக்கக் கோரி பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் மற்றும் தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடார் ஆகியோர் தாக்க்கல் செய்த நிராகரிப்பு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை சட்டமன்ற தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து, திமுக சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வேட்பாளர் கே.கே.சி.பாலு தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ’வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்ப்டட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைபாடுகள் இருந்தன. அதனை நான் சுட்டிக்காட்டினேன். அவற்றை நிவர்த்தி செய்யாமல் தேர்தல் நடத்தப்பட்டது. மேலும், வாக்கு எண்ணிக்கையிலும் குளறுபடிகள் இருந்தன. 81 வாக்குப்பதிவு இயந்திரங்களில் குறைபாடுகள் இருந்தன’ என்று மனுவில் கோரியிருந்தார்.
இதேபோல தென்காசி தொகுதியில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எஸ்.பழனி நாடார் வெற்றியை எதிர்த்து, அதிமுக சார்பில் போட்டியிட்டு 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், ’பதிவான வாக்குகளுக்கும், அறிவிக்கப்பட்ட வாக்கு எண்ணிக்கைக்கும் இடையில் வித்தியாசம் உள்ளன. எனவே, தபால் வாக்குகளையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளில் 28 முதல் 30-வது சுற்று வரையிலான வாக்குகளையும் மறு எண்ணிக்கை நடத்த உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த தேர்தல் வழக்குகள் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணையில் உள்ளன. தங்களுக்கு எதிரான தேர்தல் வழக்குகளை ரத்து செய்யக் கோரி, பெருந்துறை அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமாரும், தென்காசி காங்கிரஸ் எம்எல்ஏ பழனி நாடாரும் தனித்தனியாக நிராகரிப்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி, இருவரின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இருவருக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.