ரஷ்ய அதிபர் புடினுடன் நெருக்கமான தொடர்புடைய கோடீஸ்வரர்கள் மீதான தடை நடவடிக்கைகளை மும்முரப்படுத்தியுள்ளது பிரித்தானியா.
அப்படி பிரித்தானியாவால் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்ய கோடீஸ்வரர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
அவ்வகையில், உஸ்பெகிஸ்தானில் பிறந்த ரஷ்ய கோடீஸ்வரரான Alisher Usmanov, ரஷ்ய துணை பிரதமராக பதவி வகித்த Igor Shuvalov ஆகியோர் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரித்தானியாவின் சர்ரேயில், 60 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீடு ஒன்று வைத்திருக்கும் ரஷ்ய கோடீஸ்வரரான Alisher Usmanov மீதும், Igor Shuvalov மீதும் தடைகள் விதித்துள்ளார் பிரித்தானிய வெளியுறவுச் செயலரான Liz Truss.
இந்த Shuvalov என்னும் ரஷ்ய கோடீஸ்வரருக்கு லண்டனில், பாதுகாப்புத்துறை அமைச்சகத்தைப் பார்த்தாற்போல் 11.4 பவுண்டுகள் மதிப்பிலான அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. தனது மனைவியின் நாய்களை நாய் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்வதற்கென்றே தனியாக 38 மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான ஜெட் விமானம் ஒன்று வைத்திருக்கிறாராம் அவர்.
Shuvalov மற்றும் அவரது மனைவியின் மொத்த சொத்துக்களும் முடக்கப்படுவதுடன், அவர்கள் பயணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புடினுக்கு நெருக்கமான இந்த இருவருக்கும் சொந்தமான பிரித்தானியாவிலுள்ள பெரும்பாலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதுடன், இனி, பிரித்தானியர்கள் யாரும் அவர்களுடன் வர்த்தகம் முதலான எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளமுடியாது.
இந்த இருவர் மீதான தடை, புடினுக்கு நெருக்கமானவர்களை குறிவைத்துத் தாக்குவோம் என்பதற்கான தெளிவான செய்தியாகும் என்று கூறியுள்ளார் Truss.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, பிரித்தானியா ரஷ்ய கோடீஸ்வரர்களைக் குறிவைத்து வருகிறது. அவ்வகையில், தற்போது புடினுக்கு நெருக்கமான 15 பேர் மீது பிரித்தானியா தடைகளை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.