“பதவியை ராஜினாமா செய்ய முடியாது..!" – முதல்வர் ஸ்டாலினுக்கு திமுக சேர்மனின் கணவர் பதில்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை தேர்ந்தெடுக்கும் மறைமுகத் தேர்தல் இன்று நடைப்பெற்றது. அதில் தி.மு.க தலைமையால் கூட்டணிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில், தி.முக-வினர் போட்டியிட்டு வெற்றிபெற்றனர். அதுகுறித்து தி.மு.க-விடம் கூட்டணிக் கட்சியினர் முறையிட்டு வரும் நிலையில், “கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு.க சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தை காக்க வேண்டுமென முதல்வர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவு செய்திருந்தார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் தி.மு.க-வினருக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், “நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.

திருமாவளவன்

இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது. அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது. பேரறிஞர் அண்ணா சொன்ன “கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டில்” மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.

அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அதில் உறுதியாக இருக்கிறேன். தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது.

கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில், கடலூரில் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சியில் மறைமுகத் தேர்தலின்போது பெரும் களேபரம் அரங்கேறியது. 30 வார்டுகளைக் கொண்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் தி.மு.க நேரடியாக 11 இடங்களையும், தி.மு.க சின்னத்தில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலா ஒரு இடங்களையும், காங்கிரஸ், முஸ்லிம் லீக், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தலா ஒரு இடங்களையும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இரண்டு இடங்களையும் பிடித்தன. இவர்கள் தவிர 7 சுயேச்சைகள் வார்டுகளைக் கைப்பற்றியிருந்தனர். தி.மு.க தரப்பில் R.R மெட்ரிக் பள்ளியின் உரிமையாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் கௌரவ செயலாளருமான ராதாகிருஷ்ணன் மனைவி ஜெயந்தி ராதாகிருஷ்ணன்தான் சேர்மன் வேட்பாளர் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தி.மு.க தலைமை வெளியிட்ட வேட்பாளர் பட்டியலில் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி கூட்டணிக் கட்சியான வி.சி.க-வுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் கடும் அதிருப்தியடைந்த ராதாகிருஷ்ணன் தரப்பு, தி.மு.க-வின் 13 கவுன்சிலர்கள் மற்றும் 7 சுயேச்சை கவுன்சிலர்களை இரவோடு இரவாக கடத்திவிட்டதாக நேற்று தகவல் வெளியானது.

இதுகுறித்து நேற்று (03.03.2022) நம்மிடம் பேசிய ராதாகிருஷ்ணனின் ஆதரவு கவுன்சிலர்கள் சிலர், “சேர்மன் பதவி உங்களுக்குத்தான் என்று அமைச்சர் சி.வெ.கணேசன் வாக்குறுதி கொடுத்ததால்தான் ராதாகிருஷ்ணன் சுமார் 1 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்தார். கட்சி பணமே கொடுக்காத நிலையில் சேர்மன் வேட்பாளர் என்ற முறையில் மற்ற வேட்பாளர்களின் செலவையும் ராதாகிருஷ்ணன்தான் பார்த்தார். அப்படி இருக்கும்போது கூட்டணி கட்சிக்கு ஒதுக்குவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கடந்த 4 தேர்தல்களிலும் சேர்மன் பதவி தனிப்பிரிவினரிடம் இருந்ததால்தான் இந்தமுறை பொதுப்பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது.

நகராட்சித் தலைவர் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன்

அப்படி இருக்கும்போது கூட்டணி என்ற பெயரில் மீண்டும் தனிப்பிரிவினருக்கே ஒதுக்குவதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. முன்பே இதனை சொல்லியிருந்தால் நாங்கள் ஏன் இவ்வளவு செலவு செய்திருக்கப் போகிறோம்? எங்களை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார்கள். கட்சி இனி எங்களுக்கு தேவையில்லை. மறைமுகத் தேர்தலில் பார்த்துக்கொள்ளலாம்” என்று ஆவேசமாக தெரிவித்தனர்.

இந்த நிலையில்தான், இன்று தி.மு.க தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்த வி.சி.க வேட்பாளர் கிரிஜா திருமாறனும், அவரை எதிர்த்து தி.மு.க கவுன்சிலர் ஜெயந்தி ராதாகிருஷ்ணனும் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் வெற்றிபெற அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வி.சி.க வேட்பாளர் கிரிஜா திருமாறன் தோல்வியடைந்தார். அதனால் மீண்டும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார் கிரிஜா திருமாறன். ஆனால், அதிலும் தி.மு.க நகரச் செயலாளர் மணிவண்ணனின் மனைவி ஜெயப்பிரபாவிடம் தோல்வி அடைந்தார்.

அதையடுத்து நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணனை தொடர்புகொண்ட நாம், “முதல்வரின் உத்தரவை ஏற்று ராஜினாமா செய்வீர்களா?” என்று கேள்வி எழுப்பினோம்.

அதற்கு, “நாங்கள் பதவியை ராஜினாமா செய்ய மாட்டோம். தி.மு.க-வின் வாக்குகளால் மட்டும் நாங்கள் வெற்றிபெற்றுவிடவில்லை. இந்த நகரத்தின் நன்மையைக் கருதி அ.தி.மு.க, பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் எங்களுக்கு வாக்களித்ததால்தான் நாங்கள் வெற்றிபெற்றிருக்கிறோம். 26 வாக்குகள் வாங்கியிருக்கிறோம். அதில் 11 வாக்குகள்தான் தி.மு.க-வினருடையது. கூட்டணியில் இருந்த வி.சி.க-வினர் தனியாகப் போட்டியிட்டதால் அவர்களின் வாக்குகள் எங்களுக்கு விழவில்லை. எங்களுக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றிவிட்டு, பதவியை ராஜினாமா செய்துவிட்டு வி.சி.க-வை எப்படி வெற்றிபெற வைக்க முடியும்? எங்கள் நிலைப்பாட்டை தலைவருக்கு விளக்கமாகக் கூறி புரிய வைப்போம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.