பெஷாவர்: பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியா இஸ்லாமிய மசூதியில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 30க்கும் மேற்பட்ட பக்தர்கள் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர். அவர்களில் பலர் படுகாயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பெஷாவரின் பழைய நகரத்தில் உள்ள குச்சா ரிசல்தார் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பக்தர்கள் கூடியிருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்பகுதியின் தெருக்கள் மிகவும் குறுகலாக இருந்ததால், ஆம்புலன்ஸ் வண்டிகள் வருவதும் செல்வதும் சிக்கலாக இருந்தது. ஆம்புலன்ஸ் வண்டிகள் காயமடைந்தவர்களை லேடி ரீடிங் மருத்துவமனைக்கு கொண்டு சென்றன. அங்கு மருத்துவர்கள் முழு முனைப்புடன் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
Atleast 30 people killed and more than 50 injured in a bomb explosion during Friday prayers at a mosque in Peshawar, Pakistan: Geo News pic.twitter.com/ZMaIZ7UVOg
— ANI (@ANI) March 4, 2022
இந்த குண்டுவெடிப்புக்கு உடனடியாக யாரும் பொறுப்பேற்கவில்லை. எனினும், இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் ஒரு பாகிஸ்தான் தாலிபான் அமைப்பு இரண்டும் இதேபோன்ற தாக்குதல்களை இந்த பகுதியில் ஏற்கனவே நடத்தியுள்ளன. இப்பகுதி அண்டை நாடான ஆப்கானிஸ்தானின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உக்ரைன் நெருக்கடி: சபோரிஜியா அணுமின் நிலையத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றின
இந்த குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தபோது, பலர் மசூதிக்குள் பிரார்த்தனையில் இருந்ததாகவும், பலர் அப்போதுதான் மசூதிக்குள் நுழைந்துகொண்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடித்த அடுத்த கணம், அந்த இடம் முழுவதும் தூசியும், உடல்களுமாக காணப்பட்டது. அதே நேரம், லேடி ரீடிங் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் பெரும் தள்ளு முள்ளு உண்டானது. காயமடைந்த பலரை அறுவை சிகிச்சை அறைகளுக்கு மாற்ற மருத்துவர்கள் போராட வேண்டி இருந்தது.
குண்டுவெடிப்புக்கு பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்துள்ளார். சன்னி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தானில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
மேலும் படிக்க | ரஷ்யா-உக்ரைன் போர்: இந்தியா மாணவர் ஒருவர் துப்பாக்கி சூட்டில் காயம்