புதுடெல்லி:
நாட்டில் கொரோனா 3-ம் அலை வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில், தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகதாரத்துறை கூறி உள்ளது.
அதே நேரத்தில் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 13,450 பேர் நேற்று குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.
இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 51 ஆயிரத்து 556 ஆக உயர்ந்தது. அதே நேரம் தொற்றின் பிடியில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 23 லட்சத்து 67 ஆயிரத்து 70 ஆக உயர்ந்தது.
தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 69,897 ஆக குறைந்துள்ளது. இது நேற்று முன்தினத்தைவிட 7,255 குறைவு ஆகும். சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சுமார் 22 மாதங்களுக்கு பிறகு இந்த அளவுக்கு குறைந்திருப்பது புள்ளி விபரங்களில் தெரிய வந்துள்ளது.
தினசரி பாதிப்பு விகிதம் 0.69 சதவீதமாகவும், வாரந்திர பாதிப்பு விகிதம் 0.90 சதவீதமாகவும் பதிவாகி உள்ளது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் விடுபட்ட மரணங்களையும் சேர்த்து 161 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 201 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,14,589 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று இதுவரை 178.29 கோடி டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 24,84,412 டோஸ் தடுப்பூசிகள் அடங்கும்.