பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ரவிக்குமார் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான வார்டுகளை திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கைப்பற்றின. இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சிகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சில இடங்களில் திமுகவினர் போட்டி வேட்பாளர்களாக களமிறங்கி வெற்றி பெற்றனர். இதனை சுட்டிக்காட்டி, கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்ததை அடுத்து, இதுபோல் வெற்றி பெற்ற திமுகவினரை பதவியில் இருந்து விலகுமாறு அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். அவ்வாறு பதவி விலகாதவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், பூந்தமல்லி திமுக நகரச் செயலாளர் பதவியில் இருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் எம்.ரவிக்குமார் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அக்கட்சிப் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முன்னதாக பூந்தமல்லி நகரத் தலைவர் தேர்தலில், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி தனது மனைவியை எம். ரவிக்குமார் நிறுத்தியதாக கூறப்பட்டது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM