கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் நீடித்து வரும் நிலையில், கீவ் நகரிலிருந்து ஆறு சிங்கங்களும், ஆறு புலிகளும் போலந்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
உக்ரைன் மீது ரஷ்யா தீவிரத் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லைப் பகுதியில் தொடங்கியத் தாக்குதல் இப்போது குடியிருப்பு பகுதிகள் வரையில் தொடர்கிறது. இதனால் உக்ரைன் நாட்டில் வசித்து வரும் வெளிநாட்டினரை பாதுகாப்பாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகள் அறிவுறுத்தியும், அவர்கள் பாதுகாப்பாக வெளியேற வசதி செய்தும் வருகின்றன. லட்சக்கணக்கான உள்நாட்டினரோ எல்லை நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
இந்தச் சூழ்நிலையில், கீவ் நகருக்கு அருகில் உள்ள உயிரியல் பூங்காவிலிருந்து 6 சிங்கங்கள், 6 புலிகள் போலந்து நகரின் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், இரண்டு காட்டுப் பூனைகள் மற்றும் ஒரு காட்டு நாயையும் ஏற்றிக்கொண்டு கீவ் நகரிலிருந்து கிளம்பிய வாகனம், போர்ப் பதற்றம் நிறைந்திருந்த ஒடிசி களத்தின் வழியாக, இரண்டு நாட்கள் பயணித்து பாதுகாப்பாக வியாழக்கிழமை போலந்தை சென்றடைந்தது.
இந்தப் பயணத்தின் ரஷ்ய படைகளின் குண்டு வீச்சுத் தாக்குதலை தவிர்ப்பதற்காக 600 மைல் கடந்து வந்ததாகவும், ஓர் இரவில் ரஷ்யத் துருப்புகளுக்கு எதிரிலேயே தங்க நேர்ந்ததாகவும் விலங்குகளை ழைத்துச் சென்றவர் தெரிவித்தார்.
சவால்கள் நிறைந்த பயணத்தில் இறுதியாக, போலந்து எல்லையில் இந்த விலங்குகள் வேறு வண்டிக்கு மாற்றப்பட்டு, உக்ரைன் வாகன ஓட்டுநர் பத்திரமாக வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.