திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை நகர்மன்றத் தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றியது.
திருச்சி மாவட்டத்தில் துறையூர், துவாக்குடி, லால்குடி, முசிறி, மணப்பாறை ஆகிய 5 நகராட்சிகள் உள்ளன. மணப்பாறை நகராட்சியில்
1, 2, 4, 6, 10, 12, 13, 18, 22, 26, 27 ஆகிய 11 வார்டுகளில் அதிமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். 5, 7, 8, 11, 17, 23, 24, 25 ஆகிய 8 வார்டுகளில் திமுக வேட்பாளர்களும், இதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் 16-வது வார்டிலும் 19, 20 ஆகிய 2 வார்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.
3, 9, 14, 15, 21 ஆகிய 5 வார்டுகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். திமுகவைவிட அதிமுக அதிக வார்டுகளில் வென்ன்றிருந்த நிலையில், சுயேச்சை உறுப்பினர்கள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் பரவியது.
இதனால், மணப்பாறை நகர்மன்ற தலைவர் பதவியை திமுக கைப்பற்றும் என்று கருதப்பட்டது. இதனிடையே, மணப்பாறை நகர்மன்ற தலைவர் பதவிக்கு திமுக சார்பில் 25-வது வார்டு உறுப்பினர் கீதா ஆ.மைக்கேல் ராஜூம், அதிமுக சார்பில் 28-வது வார்டு உறுப்பினர் பா.சுதாவும் போட்டியிட்டனர்.
இந்தநிலையில், இன்று காலை நடைபெற்ற மறைமுக தேர்தலில் அதிமுக வேட்பாளர் பா.சுதா, 15 வாக்குகள் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் கீதா ஆ.மைக்கேல் ராஜ், 12 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இதையடுத்து, மணப்பாறை நகர்மன்றத் தலைவராக பா.சுதா தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை நகராட்சி ஆணையர் எஸ்.என்.சியாமளா வழங்கினார்.
இந்தநிகழ்ச்சியில் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் ப.குமார், முன்னாள் எம்எல்ஏக்கள் செ.சின்னசாமி ஆர்.சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மாவட்டத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகள் மட்டுமின்றி, 5. நகராட்சிகள், 14 பேரூராட்சிகள் ஆகியவற்றின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளையும் கைப்பற்றி விடலாம் என்று திமுக போட்டு வைத்த கணக்கில், மணப்பாறையில் நேரிட்ட சறுக்கல் திமுகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.