மதுரை: ‘‘மதுரையில் தவறான திசையில் சென்ற திமுகவின் உருவம், பிம்பம் தற்பாது திருத்தும் வகையில் புதிய வழியில் செல்லத் தொடங்கியிருக்கிறது’’ என்று நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி புதிய மேயராக இந்திராணி பொன்வசந்த் பொறுப்புபேற்றுக் கொண்ட நிலையில் அவர், நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜனுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியது: “மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு 6 ஆண்டுகள் தாமதமாக தற்போது தேர்தல் நடந்து. அதில் தேர்வு பெற்றவர்கள் இன்று பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். முதல்வர் ஸ்டாலின், உள்ளாட்சியிலும் நம்ம ஆட்சி என்ற ஒரு முழக்கத்துடன் தேர்தலை சந்தித்தார். அவலநிலையில் இருந்த தமிழகத்தின் நிதி நிலை, மேலாண்மை, அரசு நிர்வாகம் போன்றவை கடந்த 9 மாதங்களில் சீர்திருத்தம் கொண்டு வந்ததின் அடிப்படையில் மக்கள் முழு நம்பிக்கையுடன் இதுவரை காணாத வெற்றியை இந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு வழங்கியுள்ளனர்.
அரசியலில் பலர் இருப்பார்கள். பல காரணங்களுக்காக, இலக்குகளுக்காக அரசியலுக்கு வருவார்கள். ஆனால், எங்களை பொறுத்தவரையில் நீதி கட்சி காலத்தில் இருந்து அடிப்படைத் தத்துவம், கொள்கை, சுய மரியாதை, சமூக நீதி, சமத்துவம் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி சென்றதால் இந்தியாவிலே முதல் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. அதனாலே முதல்வர் ஸ்டாலின், இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்கிறார். திராவிட மாடல் ஆரம்பமாகிவிட்டது. சுய மரியாதை எந்த மனிதர்களுக்கெல்லாம் இருக்கிறதோ அவர்களுக்கு சுய சிந்தனை இருக்க வேண்டும். சுய சிந்தனை இருக்கிறவர்களுக்கு சுய நிர்ணயம் ஒரு உரிமை.
சுய நிர்ணயத்தை உருவாக்குவது சுயாட்சி. சுயாட்சி என்பது ஒரு மாநிலத்தின் உரிமை மட்டுமில்லை. மாமன்றங்கள், மாவட்டங்கள், ஒன்றியங்கள், பஞ்சாயத்துகள் எல்லாவற்றிலும் மக்களே அவர்களை மேலாண்மை செய்துகொள்ள வேண்டும். இது சுயமரியாதையின் நீட்சி. அந்த அடிப்படையிலே மக்களுக்கான ஆட்சி நாட்டளவில், மாநில அளவில் இருப்பதைவிட உள்ளாட்சியில் இருப்பது சிறந்தது. மக்களுடைய அடிப்படை தேவைகள் குடிநீர், குப்பை அகற்றுவதல், சாலைகள் பராமரிப்பு, தெருவிளக்குகள், பாதாள சாக்கடைள் போன்றவை. இவை உள்ளாட்சியின் உரிமை, கடமை. இவை இன்னும் நம் நாட்டில் சிறந்த அளவிற்கு வரவில்லை.
இந்த விஷயத்தில் இந்தியாவின் சராசரியை விட தமிழகம் உயர்ந்து இருக்கிறது தவிர, நமது விருப்ப அளவிற்கு மக்களின் வாழ்க்கை முறை சிறப்பிக்கவில்லை. இதை திருத்துவது முதல் இலக்கு. அந்த இலக்கிற்கு முக்கிய அடிப்படை உள்ளாட்சி. இதனால்தான் கடந்த 6 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது என்று நாங்கள் சொன்னோம்.
மதுரை மாநகர வரலாற்றில் இன்றைக்கு புது ஆரம்பம். இதுவரை இல்லாத அளவிற்கு மாமன்ற உறுப்பினர்கள், பெரும்பான்மையுடன் சிறந்த மேயரை தேர்வு செய்து இருக்கிறார்கள். புதிய மேயர் இந்திராணி இரண்டு பட்டங்கள் பெற்றவர். சமுதாயத்தில் நல்லமுறையில் இணைந்து செயல்படக்கூடியவர். எந்த ஒரு கரையும் அவரது கரங்களில் இல்லை. நல்ல வரலாற்றில் இருந்து வந்தவர். திராவிடக் கொள்கைகளுக்கு என்றும் விசுவாசமாக இருக்கக்கூடியவர். அதனால், அவர் மீது தெளிவாக நம்பிக்கை இருக்கிறது.
இதுவரை அடையாத வளர்ச்சியும் முன்னேற்றமும் மதுரை மாநராட்சியில் இனி நடக்கும். இறுதியாக நான் சொல்கிறேன். கடந்த காலங்களில் மதுரையில் திமுகவின் உருவம், பிம்பம் சில வகையில் தவறான ஒரு திசையில் போய் கொண்டு இருந்தது. இதையெல்லாம் திருத்தம் செய்யும் வகையில் கடந்த 2 சட்டமன்ற தேர்தல், ஒரு மக்களவைத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல் எந்த கலங்கமும், பிரச்சனையும் இல்லாமல் முறைகளுக்கு உட்பட்டு தெளிவான சுத்தமாக யாரும் தவறும் சொல்லாத அளவிற்கு வெற்றிகரமாக நடந்து இருக்கிறது. இது மதுரையின் புது வழி. இது திமுகவின் இன்றைக்கு இருக்கிற தெளிவான பிம்பமம், உருவம் என்று அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
மேயரிடம் நான்கு நாள் கழித்துன் கேள்வி கேட்க சொன்ன நிதியமைச்சர்!
புதிய மேயர் இந்திராணி பொன்வசந்த் கூறுகையில், ‘‘மதுரையின் வளர்ச்சிக்காக என்னுடைய செயல்பாடுகள் நேர்மையுடன் இருக்கும். என்னை வாக்களித்து வெற்றி பெற்ற செய்த மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாகவும், மதுரையின் வளர்ச்சிக்கு முழு பாடுபடுடனும் செயல்படுவேன்’’ என்றார்.
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் மாநகராட்சியின் நிர்வாகம் பற்றிய சில கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், ‘‘ஏங்க அதெல்லாம்… அவங்க மெதுவா பேசுவாங்க. வேற எதாவது கேளுங்க’’ என்றார்.
மீண்டும் சில செய்தியாளர்கள் மதுரை மாநாகராட்சியின் வரிநிலுவை உள்ளிட்ட கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு நிதியமைச்சர், ‘‘ஏங்க தயவு செய்து விடுங்க. இன்றைக்குதான் பதவியேற்று இருக்காங்க. நாலு நாள் கழித்து கேளுங்க’’ என்றார். அதனால், செய்தியாளர்கள் நிதியமைச்சரிடம், ‘‘புதிய மேயர் இந்திராணி அரசியலுக்கும், நிர்வாகத்திற்கும் புதுசு. மதுரை மாநகராட்சியில் நிறைய சவால்கள் பிரச்சனைகள் அவருக்கு காத்திருக்கிறது. அதை அவரால் எப்படி சமாளிக்க முடியும்’’ என்றனர். அதற்கு பதில் அளித்த நிதியமைச்சர் பிடிஆர்பழனிவேல் தியாகராஜன், ‘‘ஜனநாயக நாட்டில் எதற்கு தேர்தல் நடத்துகிறோம். சிறந்த நிர்வாகம் தெரிந்தவர்கள் மட்டுமே அரசியலுக்கு, உள்ளாட்சிக்கு வர வேண்டும் என்றால் எதற்கு ஜனநாயகம், தேர்தல். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அவர்களின் கொள்கையும், லட்சியத்தையும் காட்ட வேண்டும், மக்களின் விருப்பங்களை அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கியதுதான் தேர்தல். எத்தனை பேர் 10 ஆண்டு நிர்வாக அனுபவத்துடன் அரசியலுக்கு வருகிறார்கள். போகப் போக கற்றுக்கொள்வார்’’ என்று பேட்டியை முடித்துக் கொண்டார்.