புதுடெல்லி: உக்ரைனில் இருந்த 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மேலும் மூன்று சி-17 விமானங்கள் அதிகாலையிலும் ஹிண்டான் விமான தளத்திற்குத் திரும்பின.
உக்ரைன் எல்லையில் நீண்டநாட்களாக படைகளுடன் காத்திருந்த ரஷ்யா, கடந்த 24-ம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதலை தொடங்கியது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் இவர்களை மீட்க, மத்தியஅரசு தொடர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த மீட்புப் பணிக்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயரிடப்பட்டுள்ளது.
உக்ரைனில் இருக்கும் இந்தியர்கள் அதன் அண்டை நாடுகளுக்கு சாலை மார்க்கமாக அழைக்கப்பட்டு, பிறகு அங்கிருந்து விமானங்கள் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர்.
உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களை விரைவாக அழைத்து வர விமானப்படையின் உதவி நாடப்பட்டுள்ளது. இதனையடுத்து விமானப்படை விமானங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. ஐஏஎப் சி-17 விமானங்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
ருமேனியா மற்றும் ஹங்கேரியில் உள்ள விமானநிலையங்களில் இருந்து உக்ரைனில் இருந்த 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் மேலும் மூன்று சி-17 விமானங்கள் அதிகாலையிலும் ஹிண்டான் விமான தளத்திற்குத் திரும்பின.
இதுகுறித்து இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
‘‘ஆபரேஷன் கங்கா மேலும் மூன்று ஐஏஎப் சி-17 விமானங்கள் ருமேனியா மற்றும் ஹங்கேரியில் உள்ள விமானநிலையங்களில் இருந்து உக்ரைன் மோதலில் பாதிக்கப்பட்ட 630 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு ஹிண்டன் விமான தளத்திற்குத் திரும்பின.
கடந்த மூன்று நாட்களில் ஒவ்வொரு விமானத்திலும் 200 இந்தியர்கள் வீதம் மொத்தம் 7 விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கியவர்கள் இந்தியாவுக்கு திருப்பியுள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
இதுமட்டுமின்றி வார்சாவில் சில மாணவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்களுடன் தங்க முடிவு செய்துள்ளதாகவும், அவர்கள் போலந்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார்.