பெங்களூரு
மேகதாது அணைக் கட்டுமானத்துக்குக் கர்நாடக அரசு நிதிநிலை அறிக்கையில் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநில அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் வரத்து மிகவும் பாதிப்படையும் என்பதால் தமிழக அரசு இதை எதிர்த்து வருகிறது. இது குறித்துப் பல முறை மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து புகார் அளித்து வருகிறது.
ஆயினும் கர்நாடக அரசு மேகதாதுவில் அணையைக் கட்ட வேண்டும் என்னும் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. இன்று கர்நாடக மாநிலத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட ரூ.1000 கோடி ஒதுகீட்டு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மத்திய அரசிடம் தேவையான அனைத்து அனுமதியும் விரைவில் பெறப்படும் எனவும் அதன்பிறகு மேகதாது அணை கட்டுமானப்பணிகள் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மத்திய அரசு அனுமதி அளிக்காத நிலையில் கர்நாடக அரசு மேகதாது அணைக் கட்டுமான பணிகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது தமிழக விவசாயிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.