பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு மேயர் பதவி கிடைத்திருப்பது அவர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இதனால் உள்ளாட்சி மன்றங்களில் புதிய காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
சென்னை மேயர்-ஆர்.பிரியா
சென்னை மேயர் ஆர்.பிரியா அயனாவரம் மங்களாபுரி பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது கணவர் கே.ராஜா. இவர் தனியார் ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 28 வயதான பிரியா எம்.காம் பட்டதாரியாவார். இவரது தந்தை பெரம்பூர் ராஜன் 30 ஆண்டுகளாக தி.மு.க. உறுப்பினராக இருந்து வருகிறார். பிரியாவின் மாமா செங்கை சிவம் மறைந்த முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. ஆவார்.
மதுரை-இந்திராணி
மதுரை மேயர் இந்திராணியின் சொந்த ஊர் தேனி மாவட்டம் கம்பம் ஆகும். முதுநிலை நூலக அறிவியல் பட்டப்படிப்பு படித்துள்ளார். தேனியில் உள்ள ஒரு பள்ளியில் 4 வருடங்களாக ஆசிரியராக பணியாற்றினார். இவரது கணவர் பொன் வசந்த் விவசாயம் செய்து வருகிறார். வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். எளிமையான குடும்பத்தை சேர்ந்த இவர்கள் வாடகை வீட்டில் வசிக்கிறார்கள். மதுரையில் உள்ள 100 வார்டுகளில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் இந்திராணி வெற்றி பெற்று உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட 11 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
திருச்சி-அன்பழகன்
திருச்சி மாநகராட்சி மேயராக பதவியேற்ற அன்பழகன் 1980-ல் தி.மு.க.வில் சேர்ந்தார். 1990 முதல் 1999 வரை நகர இளைஞரணி செயலாளராக இருந்த அவர் 1996-ம் ஆண்டு திருச்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபோது கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2001-ல் அ.தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோ திலும், மறைமுக தேர்த லில் மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையை தோற் கடித்து துணை மேயர் ஆனார். தொடர்ந்து 5 முறை கவுன்சிலராக தேர்வான அன்பழகன் 2 முறை துணை மேயராக இருந்துள்ளார்.
நெல்லை-பி.எம்.சரவணன்
நெல்லை மேயர் பி.எம்.சரவணன் பி.ஏ. பட்டதாரி. இவர் நெல்லை டவுன் பகுதியில் வசித்து வருகிறார். தி.மு.க.வில் நெல்லை மத்திய மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்து வருகிறார். அரிமா சங்கத்திலும் உள்ளார். இவரது தொழில் ரியல் எஸ்டேட் ஆகும். 1996-ம் ஆண்டு முதல் இவர் தி.மு.க. உறுப்பினராக உள்ளார்.
கோவை-கல்பனா
கோவை மேயர் கல்பனா கோவை மணியக்காரம் பாளையத்தை சேர்ந்தவர். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது கணவர் ஆனந்தகுமார் நகை விற்பனை நிறுவனத்தின் வைர நகை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். கல்பனா கணவருடன் சேர்ந்து இ-சேவை மையம் நடத்தி வருகிறார். கல்பனாவின் தாயார் அம்மா உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்கள் ரூ.5 ஆயிரம் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். இவரிடம் கார் இல்லாததால் பஸ்சில் சென்னை வந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் ஆவார்.
சேலம்-ஏ.ராமச்சந்திரன்
சேலம் மேயர் ஏ.ராமச்சந்திரன் 1961-ம் ஆண்டு அண்ணா காலத்தில் இருந்தே தி.மு.க. உறுப்பினராக உள்ளார். இவரது வயது 78. அதிக வயதுள்ள மேயர் இவர்தான். தற்போது தி.மு.க. பகுதி செயலாளராக உள்ளார். அஸ்தம்பட்டியில் வசிக்கும் இவர் கட்சி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். சென்னையிலும் கட்சி பணியில் ஈடுபட்டு கொடிகம்பங்கள் நடுவார். இவரது பிரதான தொழில் விவசாயம். கான்டிராக்ட் எடுத்தும் நடத்தி வருகிறார்.
திருப்பூர்-தினேஷ்குமார்
திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஓட்டல் மற்றும் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். திருப்பூரில் வசிக்கிறார். 2005-ம் ஆண்டு அவர் தே.மு.தி.க.வில் சேர்ந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 2016-ம் ஆண்டு தி.மு.க.வில் இணைந்தார். 2020-ம் ஆண்டு முதல் திருப்பூர் வடக்கு மாநகர தி.மு.க. பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார்.
ஈரோடு-நாகரத்தினம்
ஈரோடு மேயர் நாகரத்தினம் 1971-ம் ஆண்டு பிறந்தார். 9-ம் வகுப்பு வரை படித்துள்ளார். குடும்பத்தலைவி ஆவார். 1986 முதல் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் சுப்பிரமணி ஈரோடு மாநகர தி.மு.க. செயலாளர் ஆவார். நாகரத்தினம் 50-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று கவுன்சிலர் ஆகி உள்ளார். இவர் முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.
தூத்துக்குடி-என்.பி.ஜெகன்
தூத்துக்குடி மேயர் என்.பி.ஜெகன் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமியின் மகன் ஆவார். அமைச்சர் கீதா ஜீவனின் தம்பி. எம்.காம் பட்டதாரி, மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். லாரி போக்குவரத்து தொழில் செய்து வருகிறார்.
ஆவடி-ஜி.உதயகுமார்
ஆவடி மேயர் ஜி.உதயகுமார் தி.மு.க.வில் 8-வது வார்டு பகுதி செயலாளராக பதவி வகித்து வருகிறார். 9-வது வார்டில் கவுன்சிலராக வெற்றி பெற்று உள்ளார். இவர் எலக்ட்ரீசியன் வேலையும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவரது தந்தை ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தாம்பரம் மேயர் வசந்தகுமாரி பி.டெக் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். தாம்பரம் வடஞ்சேரியில் வசித்து வருகிறார். 25 வயதான இவருக்கு கடந்த வருடம்தான் திருமணம் நடந்தது. கணவர் கோகுல செல்வன் லேப் டெக்னீசியன் ஆவார். தந்தை கமலக்கண்ணன் 48 ஆண்டுகளாக தி.மு.க. நிர்வாகியாக உள்ளார்.
காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி எம்.பி.ஏ. படித்தவர். மகேந்திரா சிட்டியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர் 36-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலாக வெற்றி பெற்று உள்ளார். இவரது கணவர் யுவராஜ் மாவட்ட தி.மு.க.இளைஞரணி துணை அமைப்பாளர் ஆவார்.
வேலூர்-சுஜாதா
வேலூர் மேயர் சுஜாதா எம்.ஏ., பி.எட் பட்டதாரி ஆவார். மாநகர மகளிரணி அமைப் பாளராக உள்ளார். 2014-ம் ஆண்டு முதல் இந்த பதவியை வகித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக கட்சி நடத்தும் போராட்டங்களில் எல்லாம் பங்கேற்று உள்ளார். குடும்பத்தலைவி. இவரது கணவர் ஆனந்த குமார் கேபிள் ஆப்பரேட்டராகவும், டாஸ்மாக் சூப்பர்வைசராகவும் பணி புரிந்து வருகிறார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதியாகவும் உள்ளார். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.
கடலூர்-சுந்தரி
கடலூர் மேயர் சுந்தரி, கடலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு முதல் பெண் மேயர் வேட்பாளர் ஆவார். குடும்ப தலைவி. இவர் கணவர் கே.எஸ்.ராஜா கடலூர் நகர தி.மு.க.செயலாளர் ஆவார். பழக்கடை மற்றும் காய்கறி கடை நடத்தி வருகிறார். தேர்தலில் கணவன்-மனைவி இருவருமே போட்டியிட்டனர். இதில் சுந்தரி மட்டுமே வெற்றி பெற்றார்.
தஞ்சாவூர்-சண்.ராமநாதன்
தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் 2006, 2011 ஆண்டுகளில் நகராட்சி கவுன்சிலராக பதவி வகித்து உள்ளார். இப்போது தஞ்சாவூர் மாநகராட்சியான பிறகு மேயராகி உள்ளார். இவர் கடந்த 1996-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் இருந்து வருகிறார். தஞ்சை மத்திய மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆவார். ரியல் எஸ்டேட் தொழில் செய்துவருகிறார்.
கரூர்-கவிதா
கரூர் மாநகராட்சியில் முதல் மேயராக தேர்வாகியுள்ள கவிதா எம்.எஸ்சி., பி.எட். பட்டதாரி ஆவார். இவரது கணவர் கணேசன் கரூர் வடக்கு மாநகர தி.மு.க. செயலாளராகவும், தலை மைக்கழக பேச்சாளராகவும் இருந்து வருகிறார். கணேசன் ஓட்டல் நடத்தி வருகிறார். மேயராக போகும் கவிதா எண்ணை வியாபாரம் செய்து வருகி றார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 2006 முதல் 2011 வரை இனாம்கரூர் நகராட்சி தலை வராக இருந்த கவிதா தற் போது மேயராக பதவி ஏற்றுக்கொண்டார்.
ஓசூர்-எஸ்.ஏ.சத்யா
ஓசூர் மேயர் எஸ்.ஏ. சத்யாவின் சொந்த ஊர் தேன்கனி கோட்டையாகும். 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். மோட்டார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். 2006-ம் ஆண்டு ஓசூர் நகராட்சி தலைவராக இருந்துள்ளார். 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 2019-ம் ஆண்டு ஓசூர் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.
திண்டுக்கல்-இளமதி
திண்டுக்கல் மேயர் இளமதி எளிமையான குடும்பத்தை சேர்ந்தவர். குடும்ப தலைவியாக உள்ளார். இவரது கணவர் ஜோதி பிரகாஷ் வடமதுரை கூட்டுறவு சங்கத்தில் வேலை செய்து வருகிறார். பி.பி.ஏ. பட்டதாரி. ஏற்கனவே நகராட்சி கவுன்சிலராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இவருக்கு அரசில் பின்புலம் இல்லை. வார்டு பிரதிநிதியாக உள்ளார். வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
சிவகாசி-சங்கீதா இன்பம்
சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் பி.ஏ. ஆங்கில பட்டதாரி ஆவர். இவர் 34-வது வார்டில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்று உள்ளார். இவர் 2005-ம் ஆண்டு முதல் தி.மு.க.வில் உறுப்பினராக உள்ளார். இவரது கணவர் இன்பம் அச்சகம் நடத்தி வருகிறார்.
நாகர்கோவில்-மகேஷ்
நாகர்கோவில் மேயர் மகேஷ் வக்கீல் ஆவார். 1996 முதல் 2001 வரை மாவட்ட அரசு வனத்துறை வக்கீலாக இருந்தார். 2006 முதல் 2009 வரை மாவட்ட அரசு வக்கீலாக பணியாற்றினார். நாகர்கோவில் வக்கீல் சங்க தலைவராக 2 முறை பதவி வகித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு பொருளாளராக பதவி வகிக்கிறார். 2006-ம் ஆண்டு நாகர்கோவில் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.
கும்பகோணம்-சரவணன் (காங்.)
கும்பகோணம் மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். 7 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வருகிறார். 10-ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் 10 ஆண்டுகளாக நகரத்துறை தலைவராக பதவி வகித்து வருகிறார்.