ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 38 அணிகள் கலந்து கொண்டுள்ளன. தமிழக அணி டெல்லி மற்றும் சத்தீஷ்கர் அணிக்கு எதிரான ஆட்டங்களை டிரா செய்திருந்த நிலையில், தனது 3-வது ஆட்டத்தில் ஜார்கண்ட் அணியுடன் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 285 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 100 ரன்களும், சாய் கிஷோர் 81 ரன்களும் எடுத்திருந்தனர்.
ஜார்கண்ட் அணி தரப்பில் ராகுல் சுக்லா மற்றும் சுஷாந்த் மிஸ்ரா தலா 3 விக்கட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஜார்கண்ட் அணியி தொடக்க ஆட்டக்காரர் உத்காரஷ் சிங் 52 ரன்களும் கேப்டன் சௌரப் திவாரி 58 ரன்களும் எடுக்க 226 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
தமிழக அணி தரப்பில் சித்தார்த் 4 விக்கெட்டுகளையும், ஷாருக்கான் 3 விக்கெட்டுகளையும் சந்தீப் வாரியர் 2 விக்கட்டுகளையும் வீழ்த்தினர்.
59 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் எடுத்துள்ளது. பாபா அபராஜித் 7 ரன்களுடனும், சாய் கிஷோர் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை தமிழக அணி 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.