புதுடெல்லி: கரோனா தடுப்பூசி மருந்துகளில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் மருந்தும் சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றது. தற்போது ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது பொருளாதார தடைகளை சர்வதேச சமூகம் விதித்துள்ளது. இதனால் ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்து ஏற்றுமதி மற்றும் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
ஸ்புட்னிக் மருந்தை தயாரிக்கும் ரஷ்யாவின் ஆர்டிஐஎப் நிறுவனம் இந்தியாவில் இம்மருந்தைத் தயாரிக்க உரிமம் வழங்கியுள்ளது. பொருளாதார தடை காரணமாக இந்தியாவில் சுமார் 12 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்துகள் தேக்கமடைந்துள்ளதாக பார்மா துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவின் பொருளாதார தடை காரணமாக ஸ்புட்னிக் தடுப்பூசி மருந்து விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த மருந்தை 100 கோடி குப்பிகள் வரை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் பிரதான விநியோகஸ்தராகத் திகழ்கிறது. இந்நிறுவனம் தவிர ஹெட்டரோ மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆகியவை ஸ்புட்னிக் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.