ரஷ்யாவுக்கு ஐ.நா., கண்டனம்: போரை நிறுத்த வலியுறுத்தல்| Dinamalar

நியூயார்க் : கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் நடவடிக்கைகளுக்கு, ஐ.நா., பொது சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அதோடு, ‘ரஷ்யா எந்த நிபந்தனையும் இல்லாமல் போரை நிறுத்தி, தன் படைகளை திரும்பப் பெற வேண்டும்’ என, தீர்மானமும் நிறைவேற்றியுள்ளது.

உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தோடு, ரஷ்யா போரைத் தொடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானம் தோல்வி அடைந்தது. அந்த தீர்மானத்துக்கான ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா ஒதுங்கி இருந்தது.

இந்நிலையில், உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் என்ற தலைப்பிலான தீர்மானம், 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஐ.நா., பொது சபையில் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம், 96 நாடுகள் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தன. தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பில், அமெரிக்கா உட்பட 141 நாடுகள் ஆதரவு தெரிவித்து ஓட்டளித்தன. பெலாரஸ், எரீதிரியா, வடக்கு கொரியா, ரஷ்யா மற்றும் சிரியா, தீர்மானத்துக்கு எதிராக ஓட்டளித்தன.

இந்தியா, வங்கதேசம், சீனா, பாகிஸ்தான், இலங்கை உட்பட 34 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: உக்ரைன் மீது சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுப்பதாக, பிப்., 24ல் ரஷ்யா வெளியிட்ட அறிவிப்பு கண்டனத்துக்குரியது. சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டின் நில எல்லையை ஆக்கிரமிக்கும் வகையில் அச்சுறுத்துவதை ஏற்க முடியாது.

மேலும், அணு ஆயுதங்களை தயார் நிலையில் வைக்க ரஷ்யா உத்தரவிட்டுள்ளதும் கடும் கண்டனத்துக்குரியது. உறுப்பு நாட்டின் இறையாண்மை, சுதந்திரம், எல்லையை பாதுகாக்கும் உரிமைக்கு எதிரான எந்த செயலையும் ஏற்க முடியாது.உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு, இந்த சபை தன் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. ரஷ்யா எவ்வித நிபந்தனையும் இல்லாமல், போரை உடனடியாக நிறுத்த வேண்டும். அந்நாடு உக்ரைனில் இருந்து தன் படைகளை முழுமையாக விலக்கி கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

”இந்த தீர்மானத்தின் மூலம், உலக நாடுகள் தங்களுடைய கருத்துக்களை திடமாக தெரிவித்துள்ளன. அதற்கு என்னுடைய ஆதரவை தெரிவித்து கொள்கிறேன்,” என, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.