புதுடெல்லி: உக்ரைனில் சிக்கிய இந்திய மாணவர்கள், ஐரோப்பிய எல்லை நாடான ருமேனியாவில் மூன்று நாட்கள் வரை வரிசையில் நிற்கவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இன்று நண்பகல் வரை டெல்லிக்கு வந்த ஆறு மீட்பு விமானங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் சுமார் 150 பேர் வந்தடைந்துள்ளனர்.
ரஷ்யப் போரினால் உக்ரைனில் சிக்கியவர்கள் தங்கள் நாடுகளுக்குத் திரும்ப பலவேறு இன்னல்களை சந்தித்துள்ளனர். இவர்கள் மீட்பு விமானங்களை பிடிக்க, மேற்குப் பதியிலுள்ள ஐரோப்பிய நாடுகளான ஹங்கேரி, போலாந்து மற்றும் ருமேனியாவிற்கு பேருந்துகளில் செல்ல வேண்டியுள்ளது. இதில், ருமேனியா வழியாக இந்தியா திரும்பியவர்களுக்கு பல்வேறு இன்னல்கள் சந்திக்க வேண்டியதாகிவிட்டது. இது, அவர்களுக்கு எல்லைகளில் இந்திய தூதரக அதிகாரிகளை சந்திப்பது வரை தொடரும் நிலை உள்ளது. ருமேனியாவில் மீட்புப் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் போதுமானதாக இல்லை எனக் கருதப்படுகிறது. குறிப்பாக அவற்றில் மாணவிகளுக்கு கழிவறை உள்ளிட்ட வெளியில் சொல்ல முடியாத பல்வேறு சிக்கல்கள் நேர்ந்துள்ளன. பேருந்து மற்றும் மீட்பு விமானப் பதிவுகளுக்காக மூன்று நாட்கள் வரை கூட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. இந்த வரிசையில் அங்கு பெய்யும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவுகளில் இருக்க வேண்டியதாயிற்று.
இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் வினிசியா தேசிய அரசு மருத்துவப் பல்கலைகழகத்தில் பயிலும் முதலாம் ஆண்டு மாணவியான ஜனனி கூறும்போது, ‘போர் துவங்கிய பின் நாள் ஒன்றுக்கு 10 முதல் 12 தடவை பாதாள அறைகளுக்கு சென்று திரும்ப வேண்டியதாயிற்று. முதன்முறையாக நாம் மார்ச் 1-இல் ரயிலில் செல்லக் கிளம்பிய போது எங்கள் பல்கலைகழகத்தின் டீன் கையெப்பம் வாங்கவில்லை. இதனால், ரயிலில் ஏற அனுமதி இன்றி மீண்டும் விடுதிகளுக்கு திரும்பினோம். பிறகு பேருந்துகளில் எங்கள் செலவில் கிளம்பி ருமேனியா எல்லை அடைந்தோம். இதிலும் போக்குவரத்து நெரிசலால் பல கி.மீ தொலைவிற்கு நடக்க வேண்டி இருந்தது.
உக்ரைன் எல்லையிலிருந்து ருமேனியாவில் நுழைய நாம் சுமார் 24 மணி நேரம் காத்திருந்தோம். எங்களைப் போல் வேறு பலர் சுமார் மூன்று தினங்கள் வரை வரிசைகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுவும் திறந்தவெளியில் பனியில் இருப்பதால் பலருக்கும் மூச்சுவாங்குதல், காய்ச்சல் உள்ளிட்டப் பிரச்சினைகளும் இருந்தன. எங்களை அழைத்துச் செல்ல இந்திய அதிகாரிகளால் உக்ரைன் எல்லையில் நுழைய அனுமதியில்லை. உக்ரைன் எல்லையிலிருந்து வெளியேறி ருமேனியாவில் நுழைந்த பிறகே நம் அரசின் உதவி கிடைக்கிறது. மத்திய அரசால் ஏற்பாடுகள் செய்யும் தங்குமிடங்களிலும் கூடுதல் வசதிகள் அவசியம். கைப்பேசிகளில் தீர்ந்து போன ஜார்ஜால் எவரிடமும் பேச முடியவில்லை. எல்லையில் எங்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை முழுமையாகவும் குடும்பத்தாரிடம் கூறவில்லை. இதனால், அவர்கள் கவலை கூடிவிடும் என்பதால் அவற்றை எங்களுடன் இருந்த சகமாணவிகளுடன் பேசி ஒருவொருக்கு ஒருவர் ஆறுதலாக இருந்தோம்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லி மட்டும் அன்றி இன்று மும்பைக்கும் உக்ரைனிலிருந்து அதிகமாக மீட்பு விமானங்கள் வந்திறங்கின. இவற்றில் வந்த சுமார் 900 இந்தியர்களில் தமிழர்கள் 150 பேர் இடம்பெற்றிருந்தனர்.
முன்னதாக, நேற்று மதியற்கு பின் டெல்லி வந்த இரண்டு விமானங்களில் சுமார் 80 தமிழர்கள் வந்திறங்கினர். இவர்கள் அனைவரும் நள்ளிரவு வரையிலான விமானங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு கிளம்பிச் சென்றனர்.
இதுபோல், டெல்லிக்கு வரும் மற்ற மாநில மாணவர்களில் பலரும் அங்குள்ள மாநில அரசு இல்லங்களிலும் தங்கிச் செல்கின்றனர். ஆனால், இந்த வகையில் வரும் தமிழர்களில் பலரும் டெல்லியில் தங்க விரும்பாமல் உடனடியாக தங்கள் வீடுகளுக்கு சென்றடைய விரும்புகின்றனர். இதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி டெல்லியின் தமிழ்நாடு அரசு இல்ல அதிகாரிகள் அனைவருக்கும் டெல்லி விமான நிலையத்தில் இருந்தே நேரடியாக அனுப்பி வைக்கின்றனர். இதற்காக அங்கேயே ஒரு சிறப்பு குழுவை அமர்த்தி, தமிழகத்தின் விமான நிலையங்களுக்கான டிக்கெட்டுகள் பதிவு செய்யப்படுகின்றன.
உக்ரைனில் இருந்து நாடு திரும்பியவர்களில், இன்று நண்பகல் வரையில் தமிழகம் வந்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 430 என்பது குறிப்பிடத்தக்கது.