சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மேயராக வெற்றி பெற்று பதவியேற்றுக் கொண்டனர். பல இடங்களில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், சில இடங்களில் போட்டி வேட்பாளர்களை வீழ்த்தி திமுக வேட்பாளர்கள் வெற்றி வாகை சூடினர்.
தமிழகத்தில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணை தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்றது.
சென்னை மாநகராட்சியின் 49ஆவது மேயராக திமுக சார்பில் போட்டியிட்ட பிரியா ராஜன் மட்டும் வேபுமனு தாக்கல் செய்திருந்த நிலையில், அவர் போட்டியின்றி ஒருமனதாக தேர்வானதாக அறிவிக்கப்பட்டது. அதன் படி சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலின பெண் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ள பிரியா ராஜன், 29வயதே ஆன இளம் மேயர் என்ற கூடுதல் சிறப்பையும் பெற்றிருக்கிறார். ரிப்பன் மாளிகையின் மாமன்ற அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், முறைப்படி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பிரியா ராஜனுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரியா ராஜனும் உறுதிமொழியை வாசித்து பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து பிரியாவுக்கு ஆணையர் வாழ்த்துத் தெரிவித்து மேயருக்கான அங்கியையும், தங்க ஆரத்தையும் வழங்கினார். அதன்பின்னர் சென்னை மேயர் இருக்கையில் பிரியாவை அமரவைத்து அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் வெள்ளி செங்கோலை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சி மேயராக திமுகவின் கல்பனா போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். கோவை மாநகராட்சியின் முதல் பெண்மேயராக கல்பனா பதவியேற்றிருக்கிறார்.
சேலம் மாநகராட்சி மேயராக திமுகவின் ராமச்சந்திரன் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.
மதுரை மாநகராட்சியிலும் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில், ஆணையர் இந்திராணிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.