அடம்! | Dinamalar

பெங்களூரு : உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும் வேளையிலும், தமிழகத்தின் தொடர் எதிர்ப்புக்கு இடையிலும், மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நேற்று தாக்கல் செய்த மாநில பட்ஜெட்டில், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் மூலம், அணை கட்டும் விவகாரத்தில் காங்கிரசை போலவே, ஆளும்,

பா.ஜ.,வும் அடம் பிடிப்பது உறுதியாகியுள்ளது. மேலும், அணை கட்ட வலியுறுத்தி சமீபத்தில் காங்கிரஸ் நடத்திய பாதயாத்திரைக்கு, ஆளும் பா.ஜ., அடிபணிந்ததா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.கர்நாடக முதல்வராக பசவராஜ் பொம்மை கடந்தாண்டு ஜூலை 28ல் பதவியேற்றார். பதவிக்கு வந்து ஏழு மாதங்கள் நிறைவுபெற்றுள்ளது.நிதித்துறைத் தன்னிடமே வைத்துள்ள அவர், 2022 – 23ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தயாரிப்பு பணியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக ஈடுபட்டிருந்தார்.இந்நிலையில் நேற்று கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடர் ஆரம்பமானது; வரும் 30 வரை நடக்கிறது. முதல் நாளான நேற்று பகல் 12:30 மணிக்கு, கர்நாடக சட்டசபையில் பசவராஜ் பொம்மை மாநில பட்ஜெட் தாக்கல் செய்தார்.முன்னதாக, பகல் 12:10 மணிக்கு சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் தாக்கலுக்கு ஒப்புதல் பெற்றார். கடந்தாண்டு முதல்வராக இருந்த எடியூரப்பா, 2 லட்சத்து 46 ஆயிரத்து 207 கோடி ரூபாய்க்கு பட்ஜெட் தாக்கல் செய்திருந்தார்.இந்தாண்டு, 2 லட்சத்து 65 ஆயிரத்து 720 கோடி ரூபாய்க்கு பசவராஜ் பொம்மை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். ஆனால், 2 லட்சத்து 61 ஆயிரத்து 977 கோடி ரூபாய் மட்டுமே வருவாய் வரும் என குறிப்பிட்டார். அந்த வகையில், வருவாயை விட, செலவு அதிகமாக இருப்பதால், இது பற்றாக்குறை பட்ஜெட் ஆகும்.இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்துக்கு, 1,000 கோடி ரூபாய் ஒதுக்கிஉள்ளார். மத்திய அரசிடமிருந்து தடை இல்லா சான்றிதழ் பெற்று விரைவில் திட்டம் ஆரம்பிக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.மேகதாது திட்டத்தால் தமிழக விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், தொடர்ந்து தமிழக அரசும், விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது; இன்னும் நிலுவையில் உள்ளது.இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி, கர்நாடக காங்கிரசார் ராம்நகரில் இருந்து, பெங்களூரு வரை பாத யாத்திரை நடத்தி நேற்று முன்தினம் தான் முடித்தனர். அடுத்தாண்டு நடக்கவுள்ள

சட்டசபை தேர்தல் கருத்தில் கொண்டு பாத யாத்திரை நடத்தியதாக சிலர் கூறினர். இது ஆளுங்கட்சியான பா.ஜ.,வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.அதை சமாளிக்கும் வகையில், இம்முறை பட்ஜெட்டில், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. இதற்கு காங்கிரஸ் பாராட்டும் தெரிவித்து உள்ளது. இதன் மூலம், காங்கிரஸ் பாத யாத்திரைக்கு பா.ஜ., அடி பணிந்து விட்டதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.தற்போது கோடைகாலம் ஆரம்பித்துள்ளதால், காவிரி தீர்ப்பாய தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீர் விடப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.(மேலும் பட்ஜெட் செய்திகள் உள்ளே)

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.