கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தாம்பிகை பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சுமார் 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த கோயில் தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தலங்களில் ஒன்று. இங்கு 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் அமைந்திருக்கின்றன. 20 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த பிப்ரவரி 6-ம் தேதி காலை 7:15 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. இந்த கோயிலுக்கு கடந்த 2002-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகு இருபது ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து விருத்தகிரீஸ்வரை தரிசித்துச் சென்றனர்.
கும்பாபிஷேகம் முடிந்து 22 நாள்கள் ஆன நிலையில், வடக்கு கோபுர வாயில் பக்கமுள்ள விருதாம்பிகை அம்மன் சன்னதியின் கோபுர கலசத்தில் பொருத்தப்பட்டிருந்த 3 கலசங்கள் பிப்ரவரி 28-ம் தேதி நள்ளிரவு திருடப்பட்டன. 3 அடி உயரம் கொண்ட அந்த கலசங்களில் தலா 400 கிராம் தங்கமுலாம் பூசப்பட்டிருந்ததாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் பக்தர்களையும், பொதுமக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதையடுத்து, கோயிலின் செயல் அலுவலர் மாலா கொடுத்த புகாரின் அடிப்படையில் விருத்தாசலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
அதையடுத்து உதவி காவல் எஸ்.பி அங்கித் ஜெயின் ஐ.பி.எஸ், இன்ஸ்பெக்டர் விஜயகுமார், டெல்டா பிரிவு எஸ்.ஐ நடராஜன், உதவி எஸ்.ஐ கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு உதவி எஸ்.ஐ குமரேசன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகளை அமைத்து திருடுபோன கோயில் கலசங்களை கண்டுப்பிடிக்கும்படி உத்தரவிட்டார்.கோயிலில் இருந்த 36 சி.சி.டி.வி. கேமராக்கள் மற்றும் கோயிலையொட்டிய குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த தனிப்படைக் காவல்துறையினர், நேற்று திருடுபோன கலசங்களையும் அவற்றை திருடியவரையும் அதிரடியாகக் கைது செய்திருக்கின்றனர்.
இதுகுறித்தது நம்மிடம் பேசிய கடலூர் மாவட்ட எஸ்.பி சக்திகணேசன், “விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள 36 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சம்பவத்தன்று இரவு செல்போன் டார்ச் லைட் வெளிச்சம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. பின்னர் சம்பவம் நடந்த இடத்தில் ஒரு நபரின் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் Passion Pro பைக் நின்றுகொண்டிருந்தது. அந்த பைக்கில் ஒரு நபர் சாக்குப் பையுடன் வந்து பின்பக்கம் வைத்து கட்டிவிட்டு பைக்கை ஓட்டி சென்றது தெரியவந்தது. அதையடுத்து அந்த பகுதியிலுள்ள கடைகள், பெரியார் நகரில் உள்ள வீடுகளில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்தோம். அப்போது அதே பைக் இந்த சி.சி.டி.வி கேமராவிலும் பதிவாகியிருந்தது.
அதனால் கோயில் கலசங்களை திருடிய நபர்கள் பெரியார் நகருக்கு அருகில் உள்ளவராக இருக்கலாம் என கருதி அந்த பகுதியில் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீஸாரை குற்ற தடுப்பு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தியிருந்தோம். அப்போது TN 91 V 4295 என்ற பதிவெண் கொண்ட கருப்பு கலர் Passion Pro இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ய தடுத்து நிறுத்தியபோது வாகனத்தில் வந்த நபர் தப்பிக்க முயற்சி செய்தார்.
அவரை பிடித்து விசாரித்தபோது அவர் பெயர் சந்தோஷ்குமார் என்பதும், தனியார் மருத்துவமனையில் கம்பவுண்டராக வேலை செய்பவர் என்பதும் தெரியவந்தது. கோபுர கோபுர கலசங்களை திருடி விற்றால் கடனை அடைக்கலாம் என கருதி விருத்தகிரீஸ்வரர் ஆலயம் அம்மன் கோபுர கலசங்களை திருடியதாகவும், திருடிய கலசங்களை விற்பதற்காக பைக்கில் வைத்துக்கொண்டு வரும்போது பிடிபட்டதாகவும் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருக்கிறோம்” என்றார்.
விசாரணையை துவக்கிய முதல் நாளே குற்றவாளி யார் என்பதை மோப்பம் பிடித்துவிட்ட காவல்துறைக்கு, அவரது இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்குத்தான் நேரம் பிடித்திருக்கிறது. சந்தோஷ்குமாரின் வீட்டுக்கு சென்றபோது அங்கிருந்த ஒரு தண்ணீர் தொட்டிக்குள் இருந்து கலசங்களை கலசங்களை மீட்டிருக்கின்றனர்.
அப்போது ஏன் கலசங்களை திருடினாய் என்று போலீஸார் கேட்டபோது, “அந்த மூன்று கலசங்களும் அம்மாவின் தலையில் பாரமாக இருக்கிறது. அதனால் அதை அங்கிருந்து எடுத்துவிடு என்று முருகப்பெருமான் என் கனவில் வந்து சொன்னார். அதனால்தான் எடுத்தேன்” என்று சந்தோஷ்குமார் கூலாகக் கூற அழுவதா சிரிப்பதா என்று தெரியாமல்திகைத்து நின்றிருக்கின்றனர் போலீஸார்.