ஆஸ்திரேலியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே திடீர் மரணம்

மெல்போர்ன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரரான ஷேன் வார்னே ஓய்வுக்கு பிறகு வர்ணனையாளராக பணியாற்றியதுடன், சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது கருத்துகளை பதிவிட்டு வந்தார்.

52 வயது சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான ஷேன் வார்னே தாய்லாந்தில் உள்ள தனது சொகுசு பங்களாவில் நேற்று பிணமாக கிடந்தார். அசைவின்றி கிடந்த அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சிக்கு பலன் எதுவும் கிடைக்கவில்லை. திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது.

வார்னேவின் மரணத்தை அவரது தனிப்பட்ட விஷயங்களை நிர்வகித்து வரும் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஆனால் அவரது சாவுக்கான காரணம் என்ன? என்பது தெரிவிக்கப்படவில்லை. அத்துடன் இந்த தருணத்தில் குடும்பத்தினரின் தனிப்பட்ட உணர்வுக்கு மதிப்பு அளிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளது. மரணம் அடைந்த வார்னேவுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

சாதனை நாயகன்

1992-ம் ஆண்டு சிட்னியில் நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஷேன் வார்னே 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து விடைபெற்றார். அவர் ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்டில் விளையாடி 708 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். 194 ஒருநாள் போட்டியில் ஆடி 293 விக்கெட்டுகளையும் கைப்பற்றி உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் முரளிதரனுக்கு (800 விக்கெட்) அடுத்தபடியாக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் வார்னே ஆவார். 1999-ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணியின் வெற்றியிலும் வார்னே முக்கிய பங்கு வகித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட ஒரு அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமை (இங்கிலாந்துக்கு எதிராக 195 விக்கெட்) வார்னேவுக்கு உண்டு. 2005-ம் ஆண்டு அவர் டெஸ்டில் 96 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதுநாள் வரை ஒரு ஆண்டில் டெஸ்டில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற பெருமை அவரிடமே உள்ளது. சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி ஐ.பி.எல். போட்டியிலும் அவர் முத்திரை பதித்துள்ளார். 2008-ம் ஆண்டு வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மகுடம் சூடியது.

தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் 15 ஆண்டு காலம் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த வார்னேவின் திடீர் மரணம் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களையும், வீரர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அவரது மறைவுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா உள்பட பல்வேறு நாடுகளின் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கர், பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்ரிடி, வெஸ்ட்இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் உள்பட முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் பலரும் அனுதாபம் தெரிவித்து இருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.