பாலிவுட் நடிகை யாமி கௌதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் மறுவாழ்வுக்காகவும் பணியாற்றுவதற்காக, இந்தியாவில் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக செயல்பட்டு வரும் `மஜ்லிஸ்’ (Majlis)’ மற்றும் `பாரி (Pari)’ ஆகிய இரண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்துள்ளார்.
பாலிவுட் நடிகை யாமி கெளதம் இந்தி மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிப் படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது இந்தியாவில் செயல்பட்டு வரும் `மஜ்லிஸ்’ மற்றும் `பாரி’ ஆகிய இரண்டு தொண்டு நிறுவனங்களில் இணைந்துள்ளார்.
இந்த இரண்டு தொண்டு நிறுவனங்களும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தன்னார்வ அமைப்புகள். யாமி, பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு ஆதரவு அளிப்பதுடன் அவர்களின் மறுவாழ்விற்காகப் பணியாற்ற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது குறித்து கூறியுள்ள நடிகை யாமி கெளதம்,
“பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்களின் மறுவாழ்வுக்காகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் இரண்டு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் நான் கைகோத்துள்ளேன் என்பதை மிகுந்த பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறேன். பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பெண்களைக் காப்பாற்ற வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பில் முன்னேற்றம் பெற, இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்துள்ளது பெண்களின் பாதுகாப்பில் எனது ஆரம்பம்தான். எதிர்காலத்தில், அனைத்துத் தரப்பு பெண்களையும் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கு, அவர்களுக்குத் தேவையானவற்றை பெற உதவுவதிலும் இன்னும் அதிகமாகப் பங்களிக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.