புதுடெல்லி,
கொரோனா தொற்றுக்கு அணை போடும் விதமாக நாட்டில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. தொடர்ந்து கட்டம் கட்டமாக பல்வேறு பிரிவினருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் நாடு முழுவதும் இதுவரை 178.52 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன என்று மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் இரவு 7 மணி வரை 21 லட்சத்து 70 ஆயிரத்து 356 தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கின்றன.
ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்த நிலையில், சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோயுள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை ‘டோஸ்’ செலுத்தும் பணி கடந்த ஜனவரி 10-ந் தேதி தொடங்கியது. அதன்படி இதுவரை 2 கோடியே 4 லட்சத்து 78 ஆயிரத்து 473 முன்னெச்சரிக்கை ‘டோஸ்’ தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.