புதுடெல்லி: இந்தியாவில் ஜூன் 22ம் தேதிக்குப் பிறகு கொரோனா 4வது அலை ஏற்படக் கூடும் என்று கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கூறியிருப்பதை, ‘வெறும் யூகம் மட்டுமே’ என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில் இதுவரையில் 3 கொரோனா அலைகள் முடிந்துள்ள நிலயில் ‘வரும் ஜூன் மாதம் 22ம் தேதிக்குப் பிறகு நாட்டில் கொரோனா 4வது அலை உருவாகக்கூடும்,’ என்று கான்பூர் ஐஐடி.யின் ஆராய்ச்சி குழுவினர் சில தினங்களுக்கு முன் எச்சரித்தனர். இதனால், மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த எச்சரிக்கை வெறும் யூகத்தின் அடிப்படையில் கூறப்பட்டு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை ஐஐடி கணித அறிவியல் நிறுவன பேராசிரியர் சிதாப்ரா சின்கா கூறுகையில், ‘‘தற்போது நிலவும் சூழலை பார்க்கும்போது, எதிர்காலத்தில் புதிதாக ஒரு அலை உருவாகும் என்பதை கணிக்க முடியாது,” என்றார். அரியானா அசோகா பல்கலைக் கழக பேராசிரியர் கூறுகையில், “துல்லியமான தேதியுடன் குறிப்பிடப்படும் எந்த ஒரு கணிப்பையும் நம்ப மாட்டேன்,” என்றார். ‘நாட்டில் பெரும்பாலானோர் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். எனவே, 4வது அலை ஏற்பட்டாலும் வைரசின் புதிய மாறுபாடு இல்லாதபட்சத்தில் பாதிப்பு, இறப்புக்கள் பெரியளவில் இருக்காது. 4வது அலை என்பது வெறும் யூகத்தின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது,’ என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.