தேசிய பங்குச்சந்தையின் முன்னாள் தலைவர் சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து அவர் எந்நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேசியப் பங்குச் சந்தையின் செயல் அதிகாரியாகவும், அதன் நிர்வாக இயக்குநராகவும் இருந்தவர்
சித்ரா ராமகிருஷ்ணா
. பின்னர் அவர் தனிப்பட்ட காரணங்களால் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி பணியிலிருந்து விலகினார். இந்நிலையில், தனது பணிக்காலத்தில் சித்ரா ராமகிருஷ்ணன் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி குற்றம் சாட்டி உள்ளது.
தேசியப் பங்குச் சந்தையின் வணிக திட்டங்கள், பங்குச் சந்தையின் ஏற்றம், இறக்கம் குறித்த கணிப்புகள், ரகசியங்கள் என பலவற்றையும் இமயமலை சாமியார் ஒருவருடன் சித்ரா ராமகிருஷ்ணா பகிர்ந்து கொண்டதாக செபி குற்றம் சாட்டியுள்ளது. அவரது அறிவுறுத்தலின் பெயரில் ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை தேசியப் பங்குச் சந்தையின் தலைமை மூல உத்தி அதிகாரி பொறுப்பில் சித்ரா ராமகிருஷ்ணா அமர்த்தி உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது மட்டுமல்ல பங்குச் சந்தை வர்த்தகத்தின் அன்றாட நடவடிக்கையிலும் சாமியார் சித்ரா ராமகிருஷ்ணா மூலம் பங்கு பெற்றிருக்கிறார். விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ரூ.3 கோடியும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ரவி நரேனுக்கும், ஆனந்த் சுப்ரமணியனுக்கும் தலா ரூ.2 கோடியும் செபி அபராதம் விதித்தது. இருவரும் 3 ஆண்டுகள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி, மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள சித்ரா ராமகிருஷ்ணா வீட்டில் வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். மேலும், இமயமலை யோகியிடம் தேசிய பங்குச்சந்தையின் ரகசிய தகவல்களை பகிர்ந்து கொண்டது குறித்து
சிபிஐ
அமைப்பும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. இந்த வழக்கில் சில பங்குவர்த்தகர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆனந்த் சுப்பிரமணியனை சிபிஐ கைது செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு முன்ஜாமின் வழங்க சிபிஐ தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது முன்ஜாமின் மனுவை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, சித்ரா ராமகிருஷ்ணாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், அவரை எந்நேரத்திலும் சிபிஐ அமைப்பு கைது செய்யலாம் என கூறப்படுகிறது. மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சித்ரா ராமகிருஷ்ணா மேல்முறையீடு செய்யும் பட்சத்தில், கைது நடவடிக்கை தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.