Actor Vijay father SA Chandrasekar life history youtube video goes viral: பிளாட்ஃபார்மில் படுத்து தூங்குவதாக நடிகர் விஜய்யின் தந்தையும், தமிழ் சினிமாவின் முன்னனி இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.
90 களில் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஏ.சந்திரசேகர். 70 மேற்பட்ட படங்களை இயக்கிய எஸ்.ஏ.சி, தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு கன்னட படங்களையும் இயக்கியுள்ளார். தற்போது இயக்கம் மட்டுமல்லாமல், படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்தநிலையில், எஸ்.ஏ.சந்திரசேகர், ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ (Yaar Indha SAC) என்ற யூ டியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த சேனலில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பதிவு செய்ய உள்ளதாக தெரிவித்து, ஏற்கனவே அந்த சேனலில் ப்ரோமோ ஒன்றை ரிலீஸ் செய்திருந்தார்.
இந்நிலையில், எஸ்.ஏ.சி தனது முதல் வீடியோவை ’பிளாட்பார்மில் எஸ்ஏசி’ என்ற தலைப்பில் தற்போது ரிலீஸ் செய்துள்ளார். இந்த வீடியோவின் யூடியூப் லிங்கை, எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் நான் கடவுள் இல்லை படத்தில் ஹீரோவாக நடித்து வரும் சமுத்திரகனி, தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். அதில், “ஒரு உண்மையான உழைப்பு உச்சம் தொட்ட கதை.. வாழ்த்துக்கள் சார்.. இன்னும் வெல்வோம்..” என பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் எஸ்.ஏ.சி., தி நகர் பாண்டி பாஜருக்கு காரில் வந்திறங்கி பாய் மற்றும் தலையணையை எடுத்துக் கொண்டு வந்து பிளாட்ஃபார்மில் அமர்கிறார். பின்னர் தன்னுடைய 60 ஆண்டுகால வாழ்க்கை பயணம் குறித்து பேசுகிறார். அப்போது தான் அமர்ந்திருக்கும் இடத்தில் இருந்து தான் தன்னுடைய சென்னை வாழ்க்கையை தொடங்கியதாக கூறினார். நாயுடு ஹால் முன்பு சுமார் 47 நாட்கள் இருந்ததாகவும், வீதிகளிலேயே படுத்துறங்கியதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்: இதைப் பெறுகிற முதல் இந்தியர்… மீனாவுக்கு கிடைத்த பெருமை!
மேலும், மழை வரும்போதெல்லாம் அருகில் நின்று கொண்டிருக்கும் சைக்கிள் ரிக்ஷாக்களுக்குள் சென்று அமர்ந்து கொண்டிருந்ததாக தெரிவித்துள்ள எஸ்.ஏ.சந்திரசேகர், பழைய நினைவுகளை எப்போதும் மறப்பதில்லை எனக் கூறியுள்ளார். மேலும் வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறையாவது தான் படுத்துறங்கிய இடத்துக்கு வந்து உறங்கிச் செல்வதை இன்றும் வாடிக்கையாக வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இரவு 11 மணிக்கு மேல் அங்கு வந்து உறங்கி, அதிகாலை 4 மணிக்கு எழுந்து வீட்டிற்கு சென்றுவிடுவேன் எனவும், பிளாட்ஃபார்ம் வாழ்க்கையை இன்னும் மறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
யூடியூப் சேனல் எதற்காக, வீடியோ பதிவுகள் ஏன்? என்பதை குறிக்கும் விதமாக எஸ்.ஏ.சி, வெற்றி போதை ஒரு கட்டத்தில் நம் கண்ணை மறைச்சிடும். காதை செவிடாக்கிவிடும். டேய் எஸ்.ஏ.சி நீ இங்கே இருந்து தான் வந்த, உன்னை இவர் தான் தூக்கி விட்டது, இவர் தான் உனக்கு உதவி செய்தது என பேசியுள்ளார்.
எஸ்.ஏ.சந்திரசேகரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இனிவரும் எபிசோடுகளில் இதைவிட பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகும் என்றும் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர்.