ஜெனீவா-அமைதியாக, சமத்துவத்துடன், கண்ணியமாக வாழ வேண்டும் என்ற இலங்கை தமிழர்கள் விருப்பத்தை அந்நாட்டு அரசு நிறைவேற்றும் என எதிர்பார்ப்பதாக, ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.
நல்லிணக்க முயற்சி
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில், ஐ.நா., மனித உரிமை ஆணையத்தின் கூட்டம் நடந்தது. அதில், இந்திய துாதர் இந்திராமணி பாண்டே பேசியதாவது:இந்தியாவின் நட்பு நாடான இலங்கை அரசிடம், அங்குள்ள தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கண்ணியமுடன் வாழ விரும்பும் தமிழர்களின் கோரிக்கைகளை அந்நாடு நிறைவேற்றும் என, இந்தியா எதிர்பார்க்கிறது.
இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு, நல்லிணக்க முயற்சி, பொறுப்புடைமை ஆகியவை குறித்து ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கையில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இலங்கை அரசு, தமிழர்களின் சட்டப் பூர்வ கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அரசியல் சாசனம்குறிப்பாக, அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப் படுத்தும் அரசியல் சாசனத்தின் 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
சொல் வேறு, செயல் வேறு
ஐ.நா., 76வது பொது சபையில் இலங்கை அதிபர் கோத்தபய பேசும்போது, ‘மதம், மொழி, இனம் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு அனைத்து மக்களும் வளமாக, பாதுகாப்பாக, ஒற்றுமையாக வாழ நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். ஆனால், அவர் அதிபராக பொறுப்பேற்ற ஓராண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகள், பெரும்பான்மையினர் ஓரணியில் திரள்வதற்கு ஆதரவாக உள்ளன. இது, தமிழர், முஸ்லிம், கிறிஸ்துவ சிறுபான்மை மக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், நல்லிணக்க முயற்சிக்கு பாதகமாகவும் உள்ளது.- ஐ.நா., மனித உரிமைகள் ஆணைய அறிக்கை