உக்ரைனில் பிப்ரவரி 24 முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யப் படையினர் தெற்கு, கிழக்கு, வடக்கு எல்லைப் புறங்களில் பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்த கிரிமியாவை 2014ஆம் ஆண்டிலேயே ரஷ்யா கைப்பற்றியது. இப்போதைய போரில் தெற்கில் கெர்சோன், மரியுபோல் துறைமுக நகரங்களைக் கைப்பற்றியுள்ளது.
டோனட்ஸ்க், லுகான்ஸ்க் நகரங்கள் உள்ளிட்ட கிழக்குப் பகுதியை ஏற்கெனவே ரஷ்ய ஆதரவுபெற்ற கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிவிட்டனர். வடக்கில் கார்க்கிவ் நகரையொட்டிய எல்லைப் புறப் பகுதிகள் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.
தலைநகர் கீவுக்கு வடக்கே பெலாரசை ஒட்டிய எல்லைப் புறப் பகுதிகளையும் ரஷ்யப் படையினர் கைப்பற்றியுள்ளனர். வடக்குப் போர்முனையில் மார்ச் 3 நிலவரப்படி ரஷ்யப் படையினர் கீவ் புறநகர்ப் பகுதி வரை முன்னேறி இருந்ததாகப் போர் குறித்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ரஷ்யப் படையினர் கைப்பற்றிய பகுதிகளில் பொதுமக்களுக்குக் குடிநீர், மின்சாரம், குளிருக்கு வெதுவெதுப்பூட்டும் வசதி ஆகியவற்றை வழங்க மறுப்பதாகக் கூறப்படுகிறது.