உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்ற தங்களது பேருந்துகள் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது படையெடுப்பு நடத்திய ரஷ்யா கடந்த 9 நாட்களாக தீவிர தாக்குதலில் ஈடுபட்டது. கெர்சன், எனர்கோடர், மிக்கலேவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றிய ரஷ்ய படைகள் கிழக்கு பகுதியில் உள்ள நகரங்களை கைப்பற்றவும் முயன்று வருகின்றன. இதன் காரணமாக கிழக்குப் பகுதிகளில் சிக்கியிருக்கும் இந்திய மாணவர்களை மீட்பதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து மீட்புப் பணிக்காக போர் நிறுத்தம் செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியிருந்தது.
அதே நேரம் பெலாரஸில் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடந்த இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது மனிதாபிமான உதவிகளை மேற்கொள்ளவும், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன. இதைத் தொடர்ந்து உக்ரைனில் உள்ள மரியபோல், வோல்னோவாக்கா ஆகிய இரு நகரங்களில் தற்காலிக போர்நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது.
போர் பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பாக மீட்க மனிதாபிமான அடிப்படையில் இந்த தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டிருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அதன்படி உக்ரைனில் இந்திய நேரப்படி பகல் 11.30 மணியில் இருந்து தாக்குதல் நடத்தப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் தங்கியிருக்கும் இடங்களிலிருந்து இந்திய மாணவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்ற தங்களது பேருந்துகள் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலிடம் ஐநாவுக்கான ரஷ்யாவின் நிரந்தர பிரதிநிதி நெபென்ஸியா இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நெபென்ஸியா ஐநா தூதரகத்திடம் கூறுகையில், “ரஷ்ய எல்லையான பெல்காரோடு பகுதியில் இன்று காலை 6 மணியில் இருந்து 130 பாதுகாப்பான பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் உள்ள வெளிநாட்டினைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்புடன் வெளியேற அனைத்து ஒத்துழைப்பும் தரப்படும்” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM