புதுடெல்லி:
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்திய மாணவர்கள் ‘ஆபரேஷன் கங்கா’ செயல் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். உக்ரைன் வான் பகுதி மூடப்பட்டு உள்ளதால் எல்லை பகுதியில் உள்ள நாடுகளில் இருந்து இந்திய மாணவர்கள் மீட்கப்படுகிறார்கள்.
ருமேனியா, அங்கேரி, சுலோவாக்கியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டு மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
இந்த மீட்பு பணியில் விமானப்படை விமானமும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் 629 இந்தியர்களுடன் மேலும் 3 இந்திய விமானப்படை விமானங்கள் இன்று காலை டெல்லி வந்தது.
சி-17 ரக விமானப் படை விமானம் மூலம் அவர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். இதுதொடர்பாக இந்திய விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ருமேனியா, சுலோவாக் கியா, போலந்து ஆகியவற்றில் இருந்து 629 இந்தியர்கள் இன்று 3 விமானங்களில் அழைத்து வரப்பட்டனர். இந்த விமானங்கள் நேற்று அங்கு புறப்பட்டு சென்றது. இதில் 16.5 டன் நிவாரண பொருட்களும் கொண்டு செல்லப்பட்டது.
இதுவரை இந்திய விமானப்படை மூலம் 2,056 பயணிகள் மீட்கப்பட்டு உள்ளனர். 26 டன் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.