புதுடில்லி:உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சுமி மற்றும் பிசோச்சின் நகரங்களில் சிக்கி இருக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படுவதாக, உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது. இதுவரை 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்ய படை தாக்குதல் நடத்தி வருகிறது.
298 இந்தியர்கள்
உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்கள், அதன் அண்டை நாடுகளான, போலந்து, ஹங்கேரி, ருமேனியா, ஸ்லோவேக்கியாவுக்கு வரவழைத்து, அங்கிருந்து சிறப்பு விமானங்களில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.உக்ரைன் நாட்டின் கிழக்கு பகுதிகளில், ரஷ்யா ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதால் ஏராளமான இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.
இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உக்ரைனின் கிழக்குப்பகுதியில் உள்ள சுமி மற்றும் பிசோச்சின் நகரங்களில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க, அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.பிசோச்சின் நகரில் உள்ள 298 இந்தியர்களுடன் பேசி வருகிறோம். அவர்களை மீட்க பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விரைவில், அவர்கள் பாதுகாப்பாக மீட்கப்படுவர். மீட்புப் பணிகளுக்காக, செஞ்சிலுவை அமைப்பினரிடம் உதவி கோரி உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வலியுறுத்தல்
இதற்கிடையே, மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியதாவது: உக்ரைனின் சுமி நகரில் சிக்கி உள்ள இந்திய மாணவர்களின் நிலை கவலை அளிக்கிறது. இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வசதியாக போரை நிறுத்துமாறு, ரஷ்யா – உக்ரைன் அரசுகளை வலியுறுத்தி உள்ளோம்.கார்கிவ் நகரில் சிக்கியிருந்த இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். ‘ஆப்பரேஷன் கங்கா’ திட்டம் வாயிலாக இதுவரை, 63 சிறப்பு விமானங்களில், 13 ஆயிரம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
629 இந்தியர்கள் டில்லி வருகை
உக்ரைனில் உள்ள இந்தியர்களை அழைத்து வர, இந்திய விமானப் படையின் விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து, 629 இந்தியர்களுடன் புறப்பட்ட மூன்று விமானப்படை விமானங்கள், நேற்று காலை, டில்லிக்கு வந்தடைந்தன. ஹங்கேரியில் இருந்து, 183 இந்தியர்களுடன் புறப்பட்ட, ‘ஏர் இந்தியா’ விமானம், நேற்று காலை, மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கியது. ருமேனியாவில் இருந்து புறப்பட்ட, ‘ஏர் ஏசியா’ விமானம், 170 இந்தியர்களுடன் நேற்று மும்பை வந்தடைந்தது.
சிகிச்சை செலவை ஏற்க முடிவுகடந்த வாரம், உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து வெளியேற முயற்சித்த ஹர்ஜோத் சிங், 31, என்ற இந்தியர், ரஷ்ய படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்தார். அவர் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அவரின் சிகிச்சைக்கு ஆகும் முழு செலவையும் ஏற்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.