மாஸ்கோ:
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ராணுவ தளவாடங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை குறி வைத்து தாக்கினர். பின்னர் தலைநகர் கிவ் உள்பட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் தொடங்கியது.
உக்ரைன் நகரங்களுக்குள் நுழைய ரஷிய படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக தொடர்ந்து ஏவுகணை வீச்சு, குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ரஷியாவின் ஆக்ரோஷமான தாக்குதலால் உக்ரைன் மக்கள் கடும் பீதி அடைந்தனர். அவர்கள் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதைகள், வீடுகளின் அடிப்பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
அதே போல் சுமார் 18 ஆயிரம் இந்திய மாணவர்கள் போர் பகுதிகளில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் தவித்தனர். அவர்களும் மெட்ரோ ரெயில் சுரங்கப் பாதைகள், பதுங்கு குழிகளில் பதுங்கி இருந்தனர்.
உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயன்று வருகிறார்கள். அவர்கள் எல்லையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
உக்ரைனில் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியதால் இந்திய மாணவர்கள் உள்பட வெளிநாட்டினர் வெளியேற முடியவில்லை. உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.
உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி, போலந்து ஆகிய நாடுகளுக்கு இந்திய அரசு விமானங்களை அனுப்பியது. அந்த நாடுகளின் எல்லைகளுக்கு வரும் இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்படுகிறார்கள்.
சுமார் 5 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை மாணவர்கள் உக்ரைனில் பல பகுதிகளில் இன்னும் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
குறிப்பாக தாக்குதல் அதிகமாக நடந்து வரும் தலைநகர் கிவ், கார்கிவ் மற்றும் சுமி ஆகிய நகரங்களில் இந்தியர்கள் உள்ளனர். அவர்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு எடுத்து வருகிறது.
உக்ரைனில் சிக்கியிருக்கும் எஞ்சிய மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்க இந்தியா மீண்டும் ரஷியா மற்றும் உக்ரைனை வலியுறுத்தியது. தொடர்ந்து சண்டை நடந்து வருவதால் மீட்பு பணியில் சிக்கல்கள் இருப்பதால் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இந்த நிலையில் ரஷியா இன்று உக்ரைனில் 2 நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக அறிவித்தது. உக்ரைன் மீதான போர் மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கான மீட்பு பணிகளுக்காக போர் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று ரஷிய அரசு அறிவித்தது.
இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மனிதாபிமான அடிப்படையில் உக்ரைனின் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் மற்றும் கிழக்கில் உள்ள வோல் னோவாகா ஆகிய 2 நகரங்களில் இன்று முதல் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது.
அந்நகரில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியேறும் பாதைகள் அமைப்பதற்கு உக்ரைனுடன் ஒப்புக்கொள்ளப்பட்டதை அடுத்து இந்த தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இந்த போர் நிறுத்தம் இன்று பகல் 11 மணி முதல் அமலுக்கு வந்தது.
ரஷியா – உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சு வார்த்தையின்படி இந்த 2 நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த 2 நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.