தான் உக்ரைனை விட்டு தப்பி போலந்து நாட்டுக்குப் போய் விட்டதாக கூறப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று
உக்ரைன் அதிபர்
விலாடிமிர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் போட்டுள்ளார்.
உக்ரைன் மீதான போரை முழு வேகத்திற்குக் கொண்டு போயுள்ளது ரஷ்யா . திரும்பிய பக்கமெல்லாம் அதிரடியான முறையில் தாக்கி வருகிறது. உக்ரைனும் தன்னால் முடிந்த அளவுக்கு சமாளித்து பதில் தாக்குதல் தொடுத்து வருகிறது.
கீவ் நகரை ரஷ்யப் படைகள் முற்றுகையிட்டுள்ளன. தலைநகருக்கு வெளியே ரஷ்யப் படைகள் அணிவகுத்துக் காத்துள்ளன. அதேபோல கார்கிவ் நகரமும் முற்றுகையிடப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகள் அதி வேகத் தாக்குதலுக்குத் தயாராகி வருகின்றன.
இந்த நிலையில் அதிபர் ஜெலன்ஸ்கி நாட்டை விட்டுத் தப்பி விட்டதாகவும், அவர் போலந்துக்குப் போய் விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. முன்பும் கூட இப்படித்தான் தகவல்கள் வெளியாகின. இதைத் தொடர்ந்து அவர் அதிபர் மாளிகைக்கு வெளியே சாலையில் நின்றபடி ஒரு வீடியோ போட்டுப் பேசியிருந்தார்.
ஜெலன்ஸ்கி உக்ரைனை விட்டுத் தப்பிப் போய் விட்டதாக ரஷ்யா நாடாளுமன்ற சபாநாயகர் வியாச்செல்சேவ் வோலாடின் கூறியிருந்தார். அவர் கூறுகையில், ஜெலன்ஸ்கி உக்ரைனை விட்டுப் போய் விட்டார். அவர் தற்போது போலந்தில் இருக்கிறார். உக்ரைனில் இனியும் அவரால் இருக்க முடியாது என்று அவரது உதவியாளர்கள் அறிவுறுத்தியதால் அவர் போய் விட்டார் என்று கூறியிருந்தார்.
புனீத் ராஜ்குமார் போலவே.. திடீரென மரணமடைந்த வார்னே.. தாய்லாந்தில் என்ன நடந்தது?
ஆனால் இவரது கூற்றை உக்ரைன் எம்பி யெவ்ஹெனியா கிராவ்சுக் மறுத்தார். அவர் கூறுகையில், பொய்யான தகவல்களை பரப்பி வருகிறது ரஷ்யா. இது ரஷ்யாவின் அவதூறுப் பிரசாரம். அதிபர் ஜெலன்ஸ்கி கீவ் நகரில்தான் இருக்கிறார். அங்கேயேதான் தொடர்ந்து தங்கியிருப்பார். அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளை ஒருங்கிணைத்து தொடர்ந்து பணியாற்றி வருகிறார் என்று கூறினார்.
இந்தநிலையில் ஜெலன்ஸ்கி ஒரு வீடியோ போட்டுள்ளார். அவர் போட்டுள்ள வீடியோவில், நான் கீவ் நகரில்தான் இருக்கிறேன். எனது அலுவலகத்தில் இருக்கிறேன். நான் வழக்கம் போல வேலை பார்க்கிறேன். எங்கேயும் ஓடி விடவில்லை. யாரும் இங்கிருந்து ஓடவில்லை. 2 நாளைக்கு ஒரு முறை நான் ஓடிப் போய் விட்டதாக வதந்தி கிளப்பிக் கொண்டே இருக்கிறார்கள். கீவை விட்டுப் போய் விட்டேன். உக்ரைனை விட்டுப் போய் விட்டேன். அலுவலகம் வருவதில்லை என்று வதந்தி கிளப்புகிறார்கள்.
நான் இங்கேதான் இருக்கிறேன். ஸ்பாட்டில் இருக்கிறேன். எல்லோருமே இருக்கிறோம். யாருமே ஓடவில்லை. அனைவரும் வழக்கம் போல வேலை பார்த்துக் கொண்டுள்ளோம் என்றார் ஜெலன்ஸ்கி. தனது அலுவலகத்தில் வைத்து இந்த வீடியோவை எடுத்துள்ளார் ஜெலன்ஸ்கி. இந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவர் போட்டுள்ளார்.