கீவ்: உக்ரைனின் மிகப்பெரிய அணு மின்நிலையத்தை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. செர்னிஹிவ் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் வீசிய குண்டுகளில் 47 பேர் உயிரிழந்தனர். போர் தீவிரமடைந்திருப்பதால் உக்ரைன் அதிபர் ஜெலன்கிபோலந்தில் தஞ்சமடைந் திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. இரு நாடுகளுக்கு இடையிலான போர் நேற்று 9-வது நாளாக நீடித்தது. உக்ரைனின் ராணுவ நிலைகள், போலீஸ் கட்டமைப்புகளை குறிவைத்து ரஷ்ய போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின.
உக்ரைனின் ஜாபோரிசியா நகரில் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இது ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையம் ஆகும். இதனை குறிவைத்து ரஷ்யபோர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசின. அதேநேரம் ரஷ்யராணுவம் தரைவழியாக நுழைந்து ஜாபோரிசியா அணு மின் நிலை யத்தை கைப்பற்றியது.
செர்னிஹிவ் நகர் மீது ரஷ்ய போர் விமானங்கள் நேற்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் 47 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்கியை கொலை செய்ய 3 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன் காரணமாக அவர் அண்டை நாடானபோலந்தில் தஞ்சமடைந்திருப்பதாகவும், அமெரிக்காவின் சிஐஏ உளவாளிகள் மூலம் அவர் போலந்துக்கு அழைத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்நேற்று கூறும்போது, ‘‘உக்ரைனில்சிக்கித் தவிக்கும் வெளிநாட்டினர் அண்டை நாடுகளுக்கு செல்லவிடாமல் அந்த நாட்டு ராணுவம் தடுத்துவருகிறது. உக்ரைன் அரசு ரஷ்யாவுக்கு எதிராக செயல்பட்டதால் சிறப்பு ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்கி கூறும்போது, ‘‘ஜாபோரிசியா அணுமின் நிலையம் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அணுகதிர்வீச்சு ஏற்பட்டால் செர்னோபில்லைவிட பேரழிவு ஏற்படும். ஐரோப்பிய நாடுகளும் உலக நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
பெலாரஸின் பிலவ்ஜாகயா புஸ்சா நகரில் ரஷ்யா, உக்ரைன் இடையே நேற்று முன்தினம் 2-வதுசுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே 3-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியா வேண்டுகோள்
உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி நகரங்களில் சுமார் 3,000 இந்தியர்கள் சிக்கித் தவிக்கின்றனர். ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது.
எனவே இருதரப்பும் சண்டை நிறுத்தத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போதுதான் 3,000 இந்தியர்களையும் மீட்க முடியும் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தியர்கள் பத்திரமாக வெளியேற பாதுகாப்பான வழித்தடத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் ரஷ்யா, உக்ரைனிடம் இந்தியா வலியுறுத்தி வருகிறது.