உக்ரைனில் முற்றுகையிட்ட நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுவதற்காக உள்ளூர் நேரப்படி இன்று காலை 8 மணி முதல் ரஷ்யா போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் பிப்ரவரி 24 முதல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது. 9 நாட்களில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதுடன், பீரங்கிப் படைகளும் தாக்குதல் நடத்தின. இதில் உக்ரைனின் வடக்கு, கிழக்கு, தெற்குப் பகுதியில் உள்ள நகரங்கள், ராணுவத் தளங்கள், அரசு கட்டடங்கள் கடும் சேதமடைந்துள்ளன.
வடக்கில் ரஷ்ய எல்லையை ஒட்டிய கார்க்கிவ் நகரில் இன்று காலையும் குண்டுவீசித் தாக்குதல் நடந்துள்ளது.
அசோவ் கடலையொட்டிய துறைமுக நகரான மரியுபோலில் இருந்து மக்கள் வெளியேறுவதற்காகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள வால்னோவாக்கா நகரில் இருந்து மக்கள் வெளியேறிச் செல்லவும் ரஷ்யப் படையினர் அனுமதித்துள்ளனர்.
இந்தப் போர் நிறுத்தத்தைப் பயன்படுத்தி உக்ரைன் நகரங்களில் சிக்கியுள்ள இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவரை வெளியேற்றி அவர்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.