திருவனந்தபுரம்:
இந்தியாவில் இருந்து ஏராளமான மாணவர்கள் உக்ரைனில் மருத்துவம் படித்து வருகிறார்கள்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததை தொடர்ந்து அங்கு படித்து வந்த இந்திய மாணவ-மாணவிகளை மத்திய அரசு விமானம் மூலம் மீட்டு வருகிறது.
இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் ஏராளமானோர் அங்கு தவித்து வருகிறார்கள். அவர்களையும் மீட்க மத்திய அரசு முயற்சி மேற் கொண்டுள்ளது.
உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற கேரள மாணவிகள் சிலர் அங்கு செல்ல பிராணிகளை வளர்த்து வந்துள்ளனர். இதில் வண்டிபெரியாரையைச் சேர்ந்த ஆர்யா, ஒரு நாய்க் குட்டியை வளர்த்து வந்தார்.
இதுபோல செங்கனூரைச் சேர்ந்த அஞ்சுதாஸ் பூனைக் குட்டியை வளர்த்து வந்தார். போர் தொடங்கியதும் இருவரும் உக்ரைனில் இருந்து ஊர் திரும்ப ருமேனியா எல்லைக்கு பஸ்சில் சென்றனர். அப்போது இருவரும் தங்களது செல்லப் பிராணிகளையும் உடன் அழைத்துச் சென்றனர்.
ருமேனியாவில் இருந்து இந்தியா வந்த விமானத்தில் இருவருக்கும் இடம் கிடைத்தது. அப்போது அவர்கள் செல்லப்பிராணிகளையும் தங்களோடு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விமான அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவர்களுக்கு செல்லப் பிராணிகளை விமானத்தில் அழைத்து வர அனுமதி கிடைத்தது. நேற்று அவர்கள் டெல்லி வந்து சேர்ந்தனர்.
டெல்லியில் இருந்து சொந்த ஊர் திரும்ப கேரள அரசு தனி விமானம் ஏற்பாடு செய்திருந்தது. அந்த விமானத்தில் செல்லப்பிராணிகளை ஏற்றி வர கட்டணம் செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதையடுத்து ஒரு மாணவி சொந்த செலவில் விமான கட்டணம் செலுத்தி செல்லப் பிராணியை விமானத்தில் ஏற்றி கேரள அழைத்து வந்தார்.
இன்னொரு மாணவி தனது செல்லப் பிராணியை உக்ரைன் போரில் இருந்து மீட்டு விட்டதாக கூறி டெல்லியில் உள்ள தோழி வீட்டில் தங்கி உள்ளார். விரைவில் அங்கிருந்து கேரள திரும்ப உள்ளதாக அவர் கூறி உள்ளார்.