உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷியா, அந்நாட்டின் முக்கிய நகரங்களை ஒவ்வொன்றாக கைப்பற்றி வருகிறார்கள்.
ரஷியா பிடித்துள்ள நகரங்களை மீட்க உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து போராடி வருகிறது.
போர் முனையில் நிற்கும் ரஷிய படைகளை எதிர்கொண்டு வரும் உக்ரைன் ராணுவத்தினரிடம் ரஷிய வீரர்கள் பலர் ஆயுதங்களுடன் சிக்கி வருகிறார்கள். அவர்களை உக்ரைன் ராணுவ அதிகாரிகள் பிடித்து தங்கள் முகாம்களுக்கு கொண்டு சென்று சிறை வைத்துள்ளனர்.
உக்ரைனிடம் சிக்கிய ரஷிய வீரர்கள் சிலர் ராணுவ அதிகாரிகளிடம் உருக்கமாக பேசும் சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் பேசும் ரஷிய வீரர்கள், தாங்கள் சமீபத்தில்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட்டதாகவும், பயிற்சி முடியும் முன்பே போர் முனைக்கு அனுப்பி விடப்பட்டதாகவும் கூறுகி றார்கள்.
உக்ரைன் ராணுவத்திடம் பிடிப்பட்ட ரஷிய வீரர்களுக்கு 20 வயதுக்குள்தான் இருக்கும். ஆயுதங்களை சரிவர பயன்படுத்த அவர்களுக்கு தெரியவில்லை. உக்ரைன் ராணுவத்தை கண்டதும் அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடைந்துள்ளனர்.
மேலும் தங்களை சித்தரவதை செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதோடு, பெற்றோருடன் வீடியோ காலில் பேச ஏற்பாடு செய்யும்படியும் கேட்டுக்கொண்டனர்.
ரஷிய ராணுவத்தில் இளம் வீரர்கள் சேர்க்கப்பட்டதும், அவர்களுக்கு போதிய போர் பயிற்சி இல்லாததுமே போர் இன்னும் முடிவுக்கு வராததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
உக்ரைனின் பெரும் பகுதிகளை ரஷியா கைப்பற்றிய பிறகும், ராணுவத்திற்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் கிடைக்காததும் ரஷியாவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.