மிர்சாபூர்: உக்ரைன் விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டுள்ள நிலையில், 7வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. உத்தரபிரதேச மாநிலத்தில் 7-வது மற்றும் கடைசி கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அரசியல் காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி மிர்சாபூரில் நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார். உக்ரைனில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உக்ரைன் விவகாரத்தில் கூட எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன. வாரிசு அரசியல் மற்றும் மாஃபியாக்களை உத்தரபிரதேச வாக்காளர்கள் தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்; உபி.,யில் தற்போது பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உதவியாக இருந்தோம். கொரோனா தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்கப்பட்டதை சிலர் கேலி செய்தனர். இலவச ரேஷன் பொருள் வழங்கினோம். ஆயூஸ்மான் யோஜனா திட்டத்தில் மக்கள் பயனடைந்துள்ளனர். பெண்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்துள்ளோம். வரும் தேர்தலிலும் பாஜகவே ஆட்சிக்கு வர மக்கள் விரும்புகின்றனர் எனவும் கூறினார்.