கீவ்: ”இன்று முதல் உக்ரைனில் உயிரிழக்கும் ஒவ்வொரு நபரின் மரணத்திற்கும் உங்கள் பலவீனமும், ஒற்றுமையின்மையும் தான் காரணமாக இருக்கும்” என மிகக் காட்டமாகப் பேசியுள்ளார் உக்ரைன் அதிபர் வொலடிமிர் ஜெலன்ஸ்கி.
உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதலில் 9ஆம் நாளான நேற்றிரவு அதிபர் ஜெலன்ஸ்கி காணொலி வாயிலாக உரையாற்றினார். அந்த உரையில் அவர் நேட்டோ மீது சற்று கசப்புணர்வை வெளிப்படுத்தியதோடு மிகவும் உருக்கமாகப் பேசினார்.
அவர் பேச்சிலிருந்து.. இன்றிலிருந்து முதல் உக்ரைனில் உயிரிழக்கும் ஒவ்வொரு நபரின் மரணத்திற்கும் உங்கள் (நேட்டோ) பலவீனமும், ஒற்றுமையின்மையும் தான் காரணமாக இருக்கும். உக்ரைனின் நகரங்களிலும் கிராமங்களிலும் ரஷ்ய குண்டு மழையைப் பொழிய நீங்கள் பச்சைக் கொடி காட்டியுள்ளீர்கள். ஆம், நீங்கள் நோ ஃப்ளை ஜோன் உருவாக்க மறுப்பதால் அவர்களுக்கு மறைமுகமாக பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளது.
நேட்டோ குழுமம் எங்களுக்குச் செய்த ஒரே உதவி 50 டன் டீசலை உக்ரைனுக்கு அனுப்பியது மட்டுமே. இதைவைத்து புடாபெஸ்ட் நினைவுச் சின்னத்தை எரிக்கலாம் என நினைத்தார்கள் போலும்.
பொதுவான ஐரோப்பாவுக்காக நாங்கள் ரத்தம் சிந்திக் கொண்டிருக்கிறோம். லிட்டர் கணக்கிலான ரத்தத்திற்கு மாற்றாக டீசல், பெட்ரோலைக் கொடுத்து சரிக்கட்ட முடியாது.
உக்ரைனால் தாக்குப்பிடிக்க முடியாவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளாலும் தாக்குப்பிடிக்க முடியாது. உக்ரைன் மக்கள் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராகப் போராடுவார்கள். 9 நாட்களாக நாங்கள் இருளையும், கொடுமையையும் தாக்குப்பிடித்துள்ளோம். நாங்கள் ஒளியின் போராளிகள். ஐரோப்பிய வரலாறு இதை என்றும் நினைவுகொள்ளும்.
இவ்வாறு ஜெலன்ஸ்கி பேசியுள்ளார்.
நேட்டோ அமைப்பு தங்கள் நாட்டை இணைத்துக் கொள்ளாததற்கும், நோ ஃப்ளை ஜோனை அறிவிக்காததற்கும் ஜெலன்ஸ்கி முதன்முறை தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.
ஏற்கெனவே அவர் தனது முந்தைய உரையில், உக்ரைனுடன் ரஷ்ய படையெடுப்பு முடிந்துபோவதில்லை. அடுத்ததாக எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா ஆகிய பால்டிக் நாடுகளையும் ரஷ்யா குறிவைக்கும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் நேட்டோ மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
நேட்டோ மீதான ஜெலன்ஸ்கி ஆர்வத்தின் பின்னணி? நேட்டோ என்பது வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த அமைப்பு. அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ் உள்பட 12 நாடுகள் சேர்ந்து 1949இல் இந்த ராணுவ கூட்டு அமைப்பை உருவாக்கின. இதில் உறுப்பினராக உள்ள எந்தவொரு நாடு மீது ஆயுத தாக்குதல் நடந்தால், அந்த நாட்டைக் காக்க மற்ற உறுப்பு நாடுகள் ஓரணியாக சேர இணங்க வேண்டும். இதனாலேயே இதில் இணைவதை உக்ரைன் மிகப்பெரிய இலக்காகக் கொண்டிருக்க இணையவே கூடாது அது பிராந்திய பாதுகாப்புக்கு எதிரானது என்று ரஷ்யா கூறிவருகிறது.
நோ ஃப்ளை ஜோன் என்றால் என்ன? நோ ஃப்ளை ஜோன் என்று அறிவிக்க ஜெலன்ஸ்கி வலியுறுத்தி வருகிறார். நோ ஃப்ளை ஜோன் என்று ஒரு பகுதியை அறிவித்தால் அந்த வான்வழிப் பரப்பில் போர் விமானங்கள், ட்ரோன்கள், பயணிகள் விமானம் கூட பறக்கக் கூடாது. போர்ப்பதற்றக் காலங்களில் ஒரு பகுதி நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்கப்பட்டால் அந்த வான் எல்லைக்குள் பறக்க முற்படும் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படலாம். 1991ல், அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஈராக்கை நோ ஃப்ளை ஜோன் பகுதிகளாக அறிவித்தன. 2011ல் லிபியா மீது விமானங்கள் பறக்க ஐ.நா. தடை விதித்தது. ஆனால் உக்ரைனை நோ ஃப்ளை ஜோன் என்று அறிவித்தால் அமெரிக்காவும், நேட்டோ படைகளும் உக்ரைன் வான்பரப்பை பாதுகாக்க தங்களின் படைகளை அனுப்ப வேண்டும். ஆனால் அப்படிச் செய்தால் அது ரஷ்யாவுடன் நேரடியாக போர் தொடுக்க வழிவகை செய்யும். அதனாலேயே நேட்டோ உக்ரைனை நோ ஃப்ளை ஜோனாக அறிவிக்க மறுத்துள்ளது.