லக்னோ:
403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10-ந் தேதி நடந்தது. 2-வது கட்ட ஓட்டுப்பதிவு 14-ந் தேதியும், 3-வது கட்டம் ஓட்டுப்பதிவு 20-ந் தேதியும், 4-வது கட்டம் 23-ந் தேதியும், 5-வது கட்டம் 27-ந் தேதியும், 6-வது கட்டம் மார்ச் 3-ந் தேதியும் நடந்து முடிந்தது.
இதுவரை 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து இருக்கிறது. 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (7-ந் தேதி) நடக்கிறது. இதில் 9 மாவட்டங்களில் உள்ள 54 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
இந்த தொகுதிகளில் கடந்த சில தினங்களாக அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். பிரதமர் மோடி வாரணாசியில் முகாமிட்டு பிரசாரம் செய்தார். இன்று இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் வேட்பாளர்கள், கட்சி தொண்டர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து வெளியாட்கள் தொகுதியை விட்டு வெளியேறும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நாளை மறுநாள் காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்குகிறது. நக்சல்கள் ஆதிக்கம் உள்ள சாகியா, ராபர்ட்கஞ்ச், துத்தி ஆகிய தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படும். மற்ற தொகுதிகளில் 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும்.
உத்தர பிரதேசத்தில் 7 கட்டங்களாக பதிவான வாக்குகள் 10-ந் தேதி எண்ணப்படுகிறது. 5 மாநில சட்டசபை தேர்தலில் உத்தரபிரதேசத்தின் தேர்தல் முடிவு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அங்கு மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா தீவிர பிரசாரத்தை மேற்கொண்டது. அதேபோல் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் களத்தில் தீவிரமாக செயல்பட்டன.