Meenangadi grama panchayat of Wayanad: உலக வெப்பமயமாதல் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதியில் 1.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உயரக் கூடும் என்றும், சென்னை உட்பட கடற்கரை நகரங்கள் அதிக அளவு மழைப்பொழிவு மற்றும் வெள்ள அபாயங்களை சந்திக்கும் என்றும் எச்சரிக்கை செய்துள்ளனர். இந்தியாவில் 2030ம் ஆண்டுக்குள், நாட்டின் மின் தேவையில் 50% புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உருவாக்கப்படும் என்றும் நெட் ஜீரோ கார்பன் உமிழ்வு இலக்கை 2070ம் ஆண்டுக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் என்றும் கடந்த ஆண்டு க்ளாஸ்கோவில் நடைபெற்ற சி.ஒ.பி.26 மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலக அளவில் வெப்பமயமாதலால் ஏற்படும் விளைவுகள் கொஞ்சம் நஞ்சமல்ல. உலக நாடுகளின் அரசுகளே முன் வந்து கொள்கை ரீதியாக மாற்றங்களை கொண்டு வந்து அதனை நடைமுறைப்படுத்தி, அழிவின் விளிம்பில் இருக்கும் பூமியை காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்பதை நன்றாக உணர்ந்துள்ளது கேரளா மாநிலம் வயநாட்டில் அமைந்துள்ள மீனன்காடி கிராம பஞ்சாயத்து.
உள்ளாட்சி அமைப்பான கிராம பஞ்சாயத்தில் ஊர் மக்கள், கேரள அரசு மற்றும் தனல் என்ற என்.ஜி.ஒ. ஆகியவை ஒன்றாக இணைந்து கார்பன் உமிழ்வு இல்லாத கிராமத்தை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். திடக்கழிவு மேலாண்மை மற்றும் மரங்களை நடவுவதன் மூலம் கார்பனை கிரகித்துக் கொள்ளும் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்த ஊரில் செயல்பட்டு வரும் சுய உதவிக்குழுக்கள் மூலமாக பெண்கள் மாதம் தோறும் திடக்கழிவுகளில் மக்காத குப்பைகளை வீடு வீடாக சென்று வாங்கி அதனை தனித்தனியாக பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பி வைக்கின்றனர்.
2016ம் ஆண்டு கேரள அரசால் துவங்கப்பட்ட இந்த திட்டத்திற்கு ரூ. 10 கோடி நிதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து பெறப்படும் வட்டியை வைத்து, மரம் வளர்க்கும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையான காலகட்டங்களில் இந்த கிராமத்தினர் 4.7 லட்சம் மரங்களை நட்டு வைத்துள்ளனர்.
பொதுவாகவே எங்காவது ஒரு நான்கு நாட்கள், ஐந்து நாட்கள் ஊர் சுற்றலாம் என்றால் உடனே மனதில் தோன்றுவது கேரளா தான். காடுகளும், மலைகளும், கடற்கரைகளும் தான் கேரளா என்று கூறியதும் கண்முன்னே தோன்றி மறைவது. எங்கே சென்றாலும் சில முக்கியமான விசயங்களை சுற்றுலாப் பயணிகள் கடைபிடிக்க வேண்டும். அது அங்குள்ள இயற்கைச் சூழலை பாதுகாக்க பெரிய அளவில் உதவிகரமாக இருக்கும். ப்ளாஸ்டிக் கழிவுகளை கண்ட இடங்களில் போட்டுச் செல்வது, வாகனங்களில் பயணிக்கும் போது குடித்துவிட்டு அந்த பாட்டில்களை சாலையோரம் வீசிச் செல்வது, காட்டு விலங்குகளுக்கு தொந்தரவு தரும் வகையில் நின்று கொண்டு செல்ஃபி எடுப்பது போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
சமீப காலங்களில் சுற்றுலா மற்றும் போக்குவரத்து காரணமாக சூழலியலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். எந்தெந்த வகையில் மாசுகட்டுப்பாட்டு முறைகளை மேற்கொண்டு இயற்கையான சூழலை பேணிக்காப்பது என்பது தொடர்பாகவும் ஆய்வுகளை செய்து வருகின்ற சூழலில் ஒரு கிராமமே தங்களை, தங்களின் எதிர்கால சந்ததியினரின் தேவைகளையும் ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு மாற்றிக் கொண்டு வியப்பளிக்கிறது. ஒரு உள்ளாட்சி அமைப்பிற்கு இருக்கும் அதிகாரங்களையும் இது வெளி உலகிற்கு பறைசாற்றுகிறது.