உக்ரைனின் ஒடேசா நகருக்குள்
ரஷ்ய ராணுவம்
வராதபடி மண் மூட்டைகளை அடுக்கி தடை போட்டு வருகிறார்கள் மக்கள். இதில் குட்டிக் குழந்தைகளும் ஈடுபட்டிருப்பது பார்க்கவே நெகிழ்ச்சியாக உள்ளது.
உக்ரைனின் முக்கியமான துறைமுக நகரம் ஒடேசா. இந்த நகரைச் சுற்றி வளைத்துள்ள ரஷ்ய ராணுவம், நகருக்குள் நுழைந்து அதைக் கைப்பற்ற ஆயத்தமாகி வருகிறது. இதையடுத்து பொதுமக்களும் ராணுவத்துக்குத் துணையாக பல்வேறு தடுப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
நகரின் மையப் பகுதிகளில் சாலைகளிலும், தெருக்களிலும் ஏராளமான மண் மூட்டைகளை அடுக்கி தடுப்புகளை ஏற்படுத்தி வருகின்றனர். இந்தப் பணியில் குழந்தைகளும் ஈடுபட்டிருப்பது நெகிழ்வைத் தருவதாக உள்ளது. நகரின் மையப் பகுதியில் பல இடங்களிலும் பெருமளவில் மண் மூட்டைத் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது.
இந்தப் பணியில் ஈடுபட்டுள்ள குழந்தைகளுக்கு பத்து, 12 வயசுதான் இருக்கும். ஒரு பெண் குழந்தை கூறுகையில், நாங்கள் ஒடேசாவைப் பாதுகாப்போம். எல்லாம் சரியாகி விடும் என்று பெரும் நம்பிக்கையுடன் கூறினார். கடந்த ஒரு வாரமாகவே ஒடேசா நகர மக்கள் பயத்துடன்தான் வசித்து வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் ரஷ்ய படையினர் உள்ளே வரலாம் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது.
விமானப்படை இல்லாமலேயே.. ரஷ்யா வேகமாக முன்னேறுகிறது.. பரபர தகவல்!
ஒடேசா நகரில் அவ்வப்போது சைரன் ஒலித்தபடிதான் உள்ளது. தெருவில் வந்து பாரிகாட் அமைக்காதீர்கள், அபாயகரமானது என்று அரசும், ராணுவமும் அவ்வப்போது எச்சரித்தபடி உள்ளனர். ஆனால் மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் தடுப்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர்.
சமீபத்தில்தான் இன்னொரு முக்கியமான நகரான கெர்சான் நகரத்தை ரஷ்யப் படையினர் பிடித்தனர். அதேசமயம், ஒடேசாவுக்கு அருகில் உள்ள கிராமத்துக்குள் புக முயன்ற ரஷ்ய ராணுவ வீரர்களை உள்ளூர் மீனவர்கள் பிடித்துக் கொன்ற சம்பவமும் நடந்துள்ளது.
பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய ரஷ்யத் தாக்குதல் இடைவிடாமல் தொடர்ந்து வருகிறது. 2 நகரங்களில் மட்டும் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ள ரஷ்யா மற்ற பகுதிகளில் தாக்குதலை தொடர்ந்து வருகிறது.