எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.
நினைவு பலகையை திறந்து வைத்து நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை இன்று (05) முற்பகல் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கௌரவ பிரதமர் இதன்போது நாரம்மல பிரதேச சபையின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தையும் narammalaps.dolgnwp.lk வெளியிட்டு வைத்தார்.
நாரம்மல பிரதேச சபைக்குட்பட்ட மக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்கும் நோக்கில் 133 மில்லியன் ரூபாய் செலவில் புதிய இரண்டு மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் புற நெகும திட்டமும் பிரதேச சபையின் நிதியும் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,
நாரம்மல பிரதேச சபையின் புதிய கடடிடத்தை திறந்து வைக்க கிடைத்தமை குறித்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
பணியாற்றுவதற்கு சிறந்த சூழல் காணப்பட வேண்டும் என்று நான் எப்போதும் நம்புகிறேன். மழை பெய்யும் போது நனையும் இடத்தில் பழைய கட்டடங்களில் அலுவலக செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாது. எனவே ஒவ்வொரு பிரதேச சபைக்கும் புதிய கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்கி மக்களை சிறந்த சூழலில் பணிபுரியச் செய்ய வேண்டும்.
ஒரு பக்கம் போர் தொடுத்தாலும் மறுபுறம் அரசு கட்டிடங்கள், வீதிகள் போன்றவற்றை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். அதற்கு இன்று பலன் கிடைத்துள்ளது என நம்புகிறேன். குறிப்பாக நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணி தொடங்கிய போது,நெடுஞ்சாலைகள் குறித்து பல விமர்சனங்கள் எழுந்தன. பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அன்று குற்றம் சாட்டியவர்கள் இன்று அந்த வீதிகளில் பயணிக்கும் போது குற்றஞ்சாட்டுவதை நாம் அறிவோம்.
அப்போது குருநாகலை அடைய எத்தனை மணி நேரம் ஆனது? இன்று எவ்வளவு நேரம் செலவாகும்? அன்று காலை வேளையில் வரும்போது மெதமுலனவிலிருந்து கொழும்புக்கு வரும் வழியில் இடைநடுவில் உணவு அருந்திவிட்டே பயணிப்போம். அப்போது பழுதடைந்த வீதிகளே இருந்தன. ஆனால் ஒன்றரை அல்லது இரண்டு மணித்தியாலங்களில் கொழும்பு வந்து சேருகிறோம்.
இவ்வாறாக நாம் நாட்டின் அபிவிருத்தியை ஆரம்பித்தோம். போர் இடம்பெறும் போதே நாம் இதனை செய்தோம். நாம் எந்தவொரு அபிவிருத்தியையும் இடைநிறுத்தாமலேயே 30 ஆண்டுகால போரை முடிவுக்கு கொண்டு வர தீர்மானித்தோம்.
மக்களுக்கு வேண்டிய அனைத்தையும் பெற்றுக் கொடுத்து வேலை செய்வதுடனேயே நாம் போரையும் முடிவுக்கு கொண்டு வந்தோம். அதனால் தான் இன்று சுதந்திரமாக வந்து சுதந்திரமாக பேசி சுதந்திரமாக நடமாடி முடிகிறது.
இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தனது கருத்துக்களை தெளிவாக கூறி தனது நாட்டை ஒரு திசையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார். நாம் அனைவரும் பிரதமராக, அமைச்சர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக மற்றும் அரச ஊழியர்களாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.
டிஜிட்டல் மயமாக்கல் போன்ற புதிய முறைகளில் நாம் முன்னேறி வருகிறோம். நாம் எமது நாட்டையும் எமது பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். நெடுஞ்சாலைகள் மற்றும் நீர் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் முறையாக மேம்படுத்தப்பட வேண்டும். சுமார் 98 சதவீத மின்சாரம் வழங்கப்படும் போது, அதே முறையில் நுகர்வோருக்கு தண்ணீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தலைமையில் அரசாங்கம் தற்போது அந்தப் பணியை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி, நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுப்போம்.
எனவே, இந்த நாட்டை கட்டியெழுப்புவதற்கும் மக்களுக்கு சேவை செய்வதற்கும் நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம். நமது வருங்கால சந்ததியினரை பாதுகாக்க நாமும் உழைக்க வேண்டும்.இன்று போதைப்பொருள் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. நமது பிள்ளைகளை பாதுகாக்க போதைபொருள் வர்த்தகத்திற்கு எதிராக செயல்பட வேண்டும்.
அவ்வாறு செய்யாவிடின், நம் தேசத்தை அழிப்பதற்காக அவ்வாறான செயற்பாட்டை முன்னெடுப்போரை நாம் அடக்காவிட்டால், நம் பிள்ளைகள் பெரும் சிக்கலுக்கு ஆளாக நேரிடும். எனவே போதைப்பொருளில் இருந்து மக்களை பாதுகாக்க நாம் நடவடிக்கை எடுப்போம். மேலும் நமது பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். தமது பிள்ளைகள் குறித்து சில பெற்றோர் அவர்களது சிறு வயதில் அதிக கவனம் செலுத்துகின்ற போதிலும், அவர்கள் உயர் வகுப்புக்கு செல்லும் போது அவர்கள் மீதான கவனம் குறைந்துவிடுகிறது. பெற்றோர்கள் தமது பிள்ளைகளை அவர்களது போக்கில் விட்டுவிட்டு தமது வேலையைத் தொடர்கிறார்கள்.
பிள்ளைகளை சிறு வயதைவிட அவர்கள் பெரியவர்களாக வளரும் போதே அவர்கள் குறித்து அதிகம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே அவர்கள் இளைஞர்களாக வளர்ந்து நிற்கும் போது அவர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது பெற்றோரதும், பெரியோரதும் கடமையாகும். அவ்வாறு செய்யாவிடின் எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும். எனவே நாம் எமது பிள்ளைகளை பாதுகாத்து தேசத்தை கட்டியெழுப்பி இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்விடயத்தில் குறிப்பாக இப்பிரதேசத்திலுள்ள உங்கள் அனைவரதும் ஆதரவை எதிர்பார்ப்பதுடன், குறிப்பாக இப்பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எமது கௌரவத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். விசேடமாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்கள் நாட்டுக்காகவும் தேசத்துக்காகவும் தனது பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார். அதற்காக நாம் அவரை குறிப்பாக கௌரவிக்க வேண்டும். மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கும் நாட்டின் சாலை வலையமைப்பு மற்றும் ஏனைய செயற்பாடுகளுக்கும் அவர் தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றமை எமக்கு பெரும் ஆறுதலாக உள்ளது என கௌரவ பிரதமர் குறிப்பிட்டார்.
நெடுஞ்சாலை அமைச்சர் கௌரவ ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,
நாரம்மல பிரதேசத்திற்கு போன்றே மக்களுக்கும் மிகவும் தேவையான நிர்வாக கட்டிடமே இன்று கிடைத்துள்ளது. முன்பு எமது பிரதேச சபை ஒரு கூடாரக் கொட்டகையாகவே காணப்பட்டது.
கௌரவ பிரதமர் அவர்களே, நீங்கள் இந்நாட்டை மாற்றினீர்கள். இந்த போரை மாத்திரமல்ல. நீங்கள் போரை காரணம் காட்டி நாட்டை கட்டியெழுப்ப தவறவில்லை. நீங்கள் போர் இடம்பெறும் போதே நாட்டையும் அபிவிருத்தி செய்தீர்கள்.
போரை காரணங்காட்டி ஆயுதம் கொள்வனவு செய்ய வேண்டும், பாதணிகளை கொள்வனவு செய்ய வேண்டும், சீருடை கொள்வனவு செய்ய வேண்டும் என்று அவற்றை சுட்டிக்காட்டி நாட்டின் அபிவிருத்தியை மறைக்கவில்லை.போர் இடம்பெறும் போதே இந்நாட்டை புதிய நாடாக மாற்ற நீங்கள் நடவடிக்கை மேற்கொண்டீர்கள். அதன் மூலமே புறநெகும தோற்றம் பெற்றது. புறநெகும ஊடாக நகரிலுள்ள நகர சபை, பிரதேச சபைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன. அரசாங்க அதிபர் அலுவலகம், உள்ளூராட்சி சபைகளையும் நீங்கள் மறக்கவில்லை.
குருநாகல் நகரில் இன்று காணப்படுவது பழைய அரசாங்க அதிபர் அலுவலகமல்ல. கொழும்பிலும் அவ்வாறே. பல நகரங்களிலும் அந்த நிர்வாக கட்டிடங்களை புனரமைத்து நாட்டிற்கு ஏற்ற வகையில் அமைத்தீர்கள். அதன் பின்னர் கிராம மக்களுக்கான வீதிகள் புனரமைக்கப்பட்டன.
இலங்கையில் நெடுஞ்சாலை கலாசாரம் இருக்கவில்லை. வெளிநாடு சென்ற பலரும் அதனை பார்த்தனர். மற்றவர்கள் தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்தார்கள். எங்களுக்கு இது ஒரு கனவாகவே இருந்தது. அந்த கனவை நீங்கள் நனவாக்கினீர்கள். அது மட்டுமல்ல, அடுத்த கட்டமாக நீர்ப்பாசன முன்மொழிவுகள். தெதுரு ஓயா திட்டத்தை எமது மாவட்டத்தில் உங்களால் கூட நம்ப முடியவில்லை. மேலாக பறந்து செல்லும் போது பெரிய கடல் போல் இருக்கிறது என்று நீங்களே கூறினீர்கள். இவ்வளவு நீர்ப்பாசனத் திட்டங்களை நீங்கள் உருவாக்கினீர்களா? இவை மட்டும் உருவாக்கப்படவில்லை. விவசாயிகளின் பொருளாதாரம் வலுப்பெற்றது. 8, 9 ரூபாய்க்கு காணப்பட்ட ஒரு கிலோ நெல் விலை ரூபாய் 40 வரை உயர்த்தப்பட்டது.
அப்போது விவசாயிகள் வந்து விஷம் அருந்தி உயிரிழக்க போவதாகச் சொல்லவில்லை. அப்படி ஒரு சகாப்தம் இருக்கவில்லை. விவசாயிகள் குறித்து தேடிப் பார்த்தார். அரச அதிகாரிகள் குறித்து தேடிப்பார்த்தீர்கள். நிர்வாக கட்டிடங்கள் குறித்து ஆராய்ந்தீர்கள். அடுத்து அரச துறைக்கு மோட்டார் சைக்கிள் கொடுத்தீர்கள். அதுதான் உருவாக்கப்பட்ட புதிய கலாசாரம். உலகின் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல் நம் நாடு இருக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை உங்களுக்கு இருந்தது.
அமெரிக்க குடிமக்களும் வேலை இழந்தமை எமக்கு நினைவிருக்கிறது. வீட்டுக்கடனை கட்ட முடியாமல் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். ஒட்டுமொத்த ஐரோப்பாவின் பொருளாதாரமும் சரிந்தது.
அன்று போல் இப்போதும் டொலர் பிரச்சனை. போர் செய்ய பணம் இல்லை. ஆனால் நீங்கள் அதையெல்லாம் வென்றீர்கள். போரிட முடியாத போர் முடிவுக்கு வந்து உலகிற்கு காட்டப்பட்டது. அதன் பிறகு உங்களது வளர்ச்சியால் அந்த சவால்களை எதிர்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் அவதூறாகப் பேசின.
2015ஆம் ஆண்டுக்கு பின்னர் நீங்கள் ஜனாதிபதியாக இருந்திருந்தால் எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும் எமது பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருக்காது. நீங்கள் உருவாக்கிய பொருளாதாரம் அழிக்கப்பட்டது. நீங்கள் உருவாக்கிய தேசிய பாதுகாப்பு அழிக்கப்பட்டது. அதனால்தான் டொலர் இல்லாது போனது. ஐ.எஸ்.ஐ.எஸ். சஹ்ரான் தாக்குதலுக்கு பிறகுதான் இந்த நாட்டிற்கு வெளிநாட்டவர்கள் வரவில்லை. அங்குதான் டொலர் கையிருப்பு குறைய ஆரம்பித்தது. அதற்கு முன்னர் அவர்கள் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்திருந்தனர்.
இன்று காலை நிதி அமைச்சரிடம் பேசினேன். எங்களுக்கு தற்போது எவ்வித எண்ணெய் பிரச்சினையும் இல்லை. எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது. நாளை விடுமுறை. பொதுவாக அன்றைய தினம் எண்ணெய் விநியோகம் செய்யப்படுவதில்லை. மக்கள் கவலை கொள்ள வேண்டாம் என பொறுப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்க வேண்டாம். எண்ணெய் பிரச்சினைக்கு தீர்வு காண்போம். எண்ணெய் வந்துவிட்டது. மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட இந்த அரசு ஒருபோதும் இடமளிக்காது.
இராஜாங்க அமைச்சர் கௌரவ ரொஷான் ரணசிங்க,
2011 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக புற நெகும திட்டத்தை ஆரம்பித்தார். புற நெகும திட்டம் முக்கியமாக உள்ளூராட்சி மன்றங்களை இலக்காகக் கொண்டது, அதே போல் சிறிய நகரங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கு அத்தியாவசியமான நீர், மின்சாரம், நூலகங்கள், கணினி மையங்கள் போன்றவை.
புறநெகும திட்டங்களின் ஊடாக சிறந்த சேவையை ஆற்றியமைக்காக எமது பிரதமருக்கு விசேட நன்றிகள் உரித்தாகுக. புறநெகும 03ஆம் கட்டமே தற்போது செயற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போதைய பிரதமரே, 2005க்குப் பிறகு பலிகடாவாக இருந்த நாட்டையும், கேள்விக்குறியாக இருந்த நாட்டையுயே நீங்கள் 2005இல் பொறுப்பேற்றீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்.
அவ்வாறு பொறுப்பேற்ற 9 வருடங்களில் முப்பது வருட யுத்தத்தின் சாபத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி நாட்டை விரைவான அபிவிருத்திக்கு இட்டுச் சென்றார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டத்தையே இன்று அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்துகின்றார்.
கௌரவ பிரதமரின் அரசியல் அனுபவத்துடனும், அறிவுரையுடனும் இந்த கொவிட் அச்சுறுத்தலில் இருந்து இந்த நாட்டை ஜனாதிபதியால் காப்பாற்ற முடிந்தது. இந்த நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக அமையும். அது தவறாக நடக்க வழி இல்லை எனத் தெரிவித்தார்.
குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான டீ.பீ.ஹேரத், ரொஷான் ரணசிங்க, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான சமன்பிரிய ஹேரத், சுமித் உடுகும்புர, சரித்த ஹேரத் மற்றும் நாரம்மல் பிரதேச சபை தவிசாளர் டீ.எம்.சுமனசிறி உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
பிரதமர் ஊடக பிரிவு
Geethanath Kassilingam
COORDINATING SECRETARY
THE PRIME MINISTERS OFFICE