வாரணாசி: “எதிர்மறை அரசியலே எதிர்க்கட்சிகளின் சித்தாந்தம்” என்று உக்ரைன் விவகாரத்தில் பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான இறுதிப் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். அதில் ’எதிர்மறையான அரசியலே எதிர்கட்சிகளின் சிந்தாந்தமாக மாறியுள்ளது’ என்றார்.
உக்ரைன் விவகாரத்தில் எதிர்கட்சிகளை கடுமையாக விமர்சித்துப் பேசிய பிரதமர் மோடி, ” நாடு ஏதாவது சவாலை எதிர்கொள்ளும்போது அவர்கள் தங்களது அரசியல் விருப்பங்களை மட்டுமே பார்க்கின்றனர். நாட்டு மக்களும் நாட்டைக் காக்கிறவர்களும் பிரச்சினைகளுடன் போராடிக்கொண்டிருக்கும்போது எதிர்கட்சியினர் நிலைமையை மோசமாக்கிக் கொண்டிருக்கின்றனர். இதைத்தான் நாம் கரோனா பொதுமுடக்கத்தின்போதும் பார்த்தோம். இன்று உக்ரைன் விவகாரத்திலும் பார்க்கிறோம்.
கண்மூடித்தனமான எதிர்ப்பு, தொடர்ந்து எதிர்ப்பது, விரக்தி, எதிர்மறை எல்லாம் சேர்ந்து அவர்களின் சித்தாந்தமாக மாறியிருக்கிறது” என எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
முன்னதாக, உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் ’ஆபரேஷன் கங்கா’ திட்டம் என்பது மிகத் தாமதமான நடவடிக்கை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சத்து வந்தன.
உக்ரைன் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “இந்தியா திரும்பிவர மாணவர்களை கழிவறையைச் சுத்தம் செய்யச் சொல்கிறார்களாம். இது தேசத்திற்கே அவமானம். மக்களை திரும்ப அழைத்து வருவது என்பது அரசின் கடமை. அது உபகாரம் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.