பெங்களூரு: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், தேசிய கொடியை ஏந்தியவாறு இந்திய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் கார்கிவ் நகரில் நடப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சொந்த ஊர் திரும்பிய கர்நாடக மாணவர் அனீஷ் அலி கூறுகையில், “உக்ரைனில் இருந்து இந்தியர்கள் வெளியேற அந்நாட்டு அதிகாரிகள் உதவுகிறார்கள். சில இடங்களில் பேருந்து மற்றும் ரயிலில் ஏற அனுமதிக்கவில்லை என கூறுகிறார்கள். அதேபோல இந்திய தூதரக அதிகாரிகள் இந்திய மாணவர்கள் வெளியேற போதுமான உதவிகளை செய்யவில்லை. சில மாணவர்கள் தங்களது சொந்த செலவிலேயே பேருந்துகள் மூலம் வெளியேறுகிறார்கள். நான் வந்த பேருந்தில் இந்திய தேசியக் கொடி இருந்ததால் எங்களை உடனடியாக வெளியேற அனுமதித்தார்கள். தேசியக் கொடிதான் என் உயிரைக் காப்பாற்றியது. அது இல்லையென்றால் நான் போர் பகுதியிலே இருந்திருப்பேன்” என்றார்.