எமது தம்மானந்த நாயக்க தேரர் பொலன்னறுவையில் மாத்திரமன்றி முழு நாட்டிலும் மதிக்கப்படும் தேரராவார் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

எமது தம்மானந்த நாயக்க தேரர் பொலன்னறுவையில் மாத்திரமன்றி முழு நாட்டிலும் மதிக்கப்படும் தேரராவார் என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார்.

பொலன்னறுவை வரலாற்று சிறப்புமிக்க இசிபத்தனாராம ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய உடகம ஸ்ரீ தம்மானந்த தேரருக்கு உடரட அமரபுர மகா நிகாயாவின் அனுநாயக்கர் பதவியை வழங்குவதற்கான சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று (04) அலரிமாளிகையில் இடம்பெற்ற போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது கௌரவ பிரதமரினால் உடகம ஸ்ரீ தம்மானந்த தேரருக்கான சன்னஸ் பத்திரமும் சிறப்பு பரிசும் வழங்கிவைக்கப்பட்டது.

உடரட அமரபுர மஹா நிகாயவின் பதில் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய யாலகமுவே தம்மிஸ்ஸர தேரர், ஸ்ரீலங்கா ராமக்ஞா மஹா நிகாயவின் மஹாநாயக்கர் அக்கமஹா பண்டித வணக்கத்திற்குரிய மகுலேவே விமல மஹா நாயக்க தேரர், மஹா விகாரவங்ஷிக சியாமோபாலி மஹா நிகாயவின் மல்வத்து பீட அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய திம்புல் கும்புரே விமலதம்ம தேரர், மஹா விகாரவங்ஷிக சியாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி பீட அனுநாயக்கர் அத்கந்த ரஜமஹா விகாராதிபதி வணக்கத்திற்குரிய ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

நிகழ்வில் கௌரவ பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

பொலன்னறுவை வரலாற்றுச் சிறப்புமிக்க இசிபத்தனாராம ரஜமஹா விகாராதிபதி வணக்கத்துக்குரிய உடகம தம்மானந்த நாயக்க தேரர் எம்முடன் நீண்டகாலமாக இணைந்து செயற்படும் அன்பான தேரர் ஆவார்.

அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறித்து அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

நாயக்க தேரர் துறவற வாழ்க்கையில் இணைந்து 66 வருடங்களாகின்றன. நாட்டிற்கும் குறிப்பாக பௌத்த சாசனத்துக்கும் நீண்ட காலம் சேவையாற்ற முடிந்ததை பெரும் பாக்கியமாகவே நான் கருதுகிறேன்.

தேரர் ஒருவருக்கு அவசியமான பாலி மொழி உள்ளிட்ட திரிபிடக தர்மத்தை அவர் வித்யாலங்காரவின் ஊடாக பெற்று 1964ஆம் ஆண்டு வித்யாலங்கார பல்கலைக்கழகத்தில் இணைந்து ஷாஸ்திரவேதி பட்டம் பெற்றார்.

தனது உயர்கல்வியை நிறைவுசெய்து பொலன்னறுவைக்கு சென்ற அவர், தனது விகாரையில் அறநெறி பாடசாலை ஒன்றை ஆரம்பித்து, சமூகத்திற்குள் நுழையும் பிள்ளைகளுக்கு ஒழுக்கக் கல்வியை வழங்குவதற்கு எதிர்பார்த்தார்.

அதனுடன் நின்றுவிடாது சிறி விஜயபா எனும் பெயரில் பிரிவெனாவொன்றையும் ஆரம்பித்தார்.

எமது வணக்கத்திற்குரிய தேரர் பல அரச பாடசாலைகளில் சேவையாற்றிய சிறந்த ஆசிரியரும், அதிபரும் ஆவார்.

இவர் ஆற்றிய சாசன சேவையினால் உடரட அமரபுர மஹாநிpகாய வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரதம சங்கநாயகப் பதவியை பெற்றார்.

எமது தம்மானந்த நாயக்க தேரர் அவர்களின் திறமை, நெகிழ்வுத்தன்மை மற்றும் திறன் காரணமாக பொலன்னறுவையில் மாத்திரமன்றி முழு நாட்டிலும் மதிக்கப்படும் தேரராக விளங்கினார்.

இந்தியா, சிங்கப்பூர், பர்மா, தாய்லாந்து போன்ற நாடுகளில் தர்ம உபதேசங்களை நிகழ்த்திய அனுபவம் அவரது இந்த பயணத்திற்கு பெரும் பலமாக இருந்தது என்று நான் நம்புகிறேன்.

பொலன்னறுவை பழங்காலத்திலிருந்தே எமக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும். பண்டைய மன்னர்கள் பொலன்னறுவை முழுவதையும் அபிவிருத்தி செய்தது மட்டுமன்றி நீர்ப்பாசனத் துறையையும் அபிவிருத்தி செய்தனர். விகாரைகளையும் கட்டினர். பொலன்னறுவையின் இடிபாடுகள் இதற்கு சாட்சி.

இவ்வாறான மதிப்புமிக்க பிரதேசத்தில் இருந்து மதரீதியாகவும் கலாசார ரீதியாகவும் மட்டுமன்றி தேசிய ரீதியிலும் எமது நாயக்க தேரர் வழங்கிய தலைமைத்துவம் அளப்பரியது.

அவரைச் சந்தித்தபோது, நாட்டையும் சாசனத்தையும் மேம்படுத்தத் தேவையான விடயங்களைப் பற்றியே அதிகம் பேசினார்.

அவர் எவ்வளவு அன்பாகவும் நட்பாகவும் பழகுகின்றார் என்பதை அவருடனான சந்திப்புகளின் போது என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

எமது தேரருக்கு உடரட அமரபுர மஹாநிகாயவின் அனுநாயக்கர் பதவி வழங்கப்பட்டமையானது காலத்திற்கு உகந்தது என எண்ணுகின்றேன்.

அத்துடன் இப்பதவி ஊடாக அவர் அளப்பரிய சேவையாற்றுவார் என நான் எதிர்பார்க்கிறேன்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் பௌத்த சாசனத்தை மேம்படுத்த ஆர்வம் காட்டும் ஒரு தலைவராவார்.

அதனால் விகாரைகளை பாதுகாக்கவும், புனரமைக்கவும் பெரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எமது புதிய அனுநாயக்க தேரரிடமிருந்து அதற்கு தேவையான வழிகாட்டல்களும் ஆலோசனைகளும் கிடைக்கும் என நம்புகின்றோம்.

அவர் தொடர்ந்து பௌத்த சாசனத்திற்கான சேவைகளை மிகச் சிறப்பாகச் செய்வதற்குத் தேவையான உடல் மற்றும் மன வலிமை, ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளைப் பெற நான் மனதார பிரார்த்திக்கிறேன்’ என்று கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

குறித்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்க்ஷ, இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத், பாராளுமன்ற உறுப்பினர்களான அமரகீர்த்தி அதுகோரள, ரோஹண குமார திஸாநாயக்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதமர் ஊடக பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.