உக்ரைன் மீது முழு அளவிலான போர் தொடுக்க ரஷ்யா ஆயத்தமாகி வருகிறது. ஆரம்பத்தில் வேகம் காட்டிய ரஷ்யா பின்னர் மெல்லப் பதுங்கியது. வேகமாக பாய்வதற்காகத்தான் இப்படிப் பதுங்குகிறது என்று கருதப்பட்ட நிலையில் அது தற்போது உண்மையாகப் போகிறது.
உக்ரைனுக்குள் கூடுதலாக ஆயிரக்கணக்கான வீரர்களை அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளதாம். சரமாரியாக குண்டுகள் வீசி உக்ரைன் நகரங்களை வளைத்துப் பிடிக்கும் திட்டத்திலும் ரஷ்யா உள்ளதாக மேற்கத்திய உளவு அமைப்புகள் கூறியுள்ளன. கூடுதல் வீரர்களை ரஷ்யா ஆயத்தப்படுத்தி வருவது உறுதியாகியுள்ளதாக அவர்கள் சொல்கிறார்கள்.
கீவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதுதவிர உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீதும் ஒரே சமயத்தில் அதிரடித் தாக்குதல் நடத்தி அவற்றைப் பணிய வைக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாம்.
போர் 2வது வாரத்தை எட்டியுள்ள நிலையில் ரஷ்யாவின் தாக்குதலும் உக்கிரமடைந்துள்ளது. அணு உலை உள்ள ஜபோரிஸிஸியா நகரில் சரமாரியான தாக்குதலில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது. இது அபாயகரமானது என்று பல்வேறு நாடுகளும் எச்சரித்துள்ள நிலையில் அதை ரஷ்யா கண்டு கொள்ளவில்லை. ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய அணு உலை இதுதான் என்பது நினைவிருக்கலாம். இந்த அணு உலைக்கு ஏதாவது நேரிட்டால் மிகப் பெரிய பேரழிவை உக்ரைன் சந்திக்க நேரிடும். அதேசமயம், தற்போது இந்த அணு உலை ரஷ்யப் படையினர் வசம் வந்துள்ளது.
இதற்கிடையே, உக்ரைன் வான்வெளியை விமானங்கள் பறக்க தடை விதித்து நேட்டோ அமைப்பு முடிவெடுக்க மறுத்து வருவதற்கு
உக்ரைன் அதிபர்
ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உக்ரைன் வான் வெளியில் விமானங்கள் பறக்க தடை விதித்து நேட்டோ முடிவெடுக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் தவிர்ப்பது ஏன் என்று தெரியவில்லை. இதைச் செய்யாமல் இருப்பதால் ரஷ்யாவின் தாக்குதலை நேட்டோவே ஊக்குவிப்பது போல உள்ளது என்று அவர் சாடியுள்ளார்.
உக்ரைனை விட்டு ஜெலன்ஸ்கி தப்பிச்சுப் போயிட்டாரா?.. இந்த வீடியோவைப் பாருங்க!
உக்ரைன் வான்வெளிப் பகுதியில் விமானங்கள் பறக்க நேட்டோ முடிவெடுத்தால் அதில் பல சிக்கல்கள் உள்ளன. அப்படி அறிவித்தால் ரஷ்யா விமானங்கள் உக்ரைன் மீது பறக்க முடியாது. ஒரு வேளை அதை மீறி ரஷ்ய போர் விமானங்கள் பறந்தால், அவற்றை நேட்டோ படைகள் தாக்க நேரிடும். அப்படி நடந்தால் அது மிகப் பெரிய போராக அதாவது உலகப் போராக வெடித்து விடும் என்பதால் அமெரிக்கா அஞ்சுகிறது. காரணம், நேட்டோ படையில் அமெரிக்க படையினர்தான் அதிகம் என்பதால் அமெரிக்கா தனக்கும் ரஷ்யாவுக்கும் நேரடி போர் வந்து விடுமோ என்ற அச்சத்தில் உள்ளது.
என்னதான் ரஷ்யாவுக்கு எதிராக வீரமாக பேசினாலும் கூட அமெரிக்காவுக்குள் பெரும் உதறல் இருக்கத்தான் செய்கிறது என்பதை உக்ரைன் விவகாரத்தில் அது ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்தி வருகிறது. காரணம்,
புடின்
ஒரு முடிவு எடுத்து விட்டால் அத்தனை சீக்கிரம் பின்வாங்க மாட்டார். உண்டு இல்லை என்று செய்து விடுவார் என்பதால் அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் மிகவும் பொறுமை காக்கின்றன, நிதானம் காட்டுகின்றன.
“வார்னே மேஜிக்” கிரிக்கெட் உலகின் ஸ்பெஷல்.. அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது!
நேட்டோவின் இந்த நிதானத்தால் உக்ரைன்தான் படாதபாடு பட்டு வருகிறது. நேட்டோ படையினர் நேரடியாகவும் உதவில்லை. மறைமுகமாகவும் உதவவில்லை. ஆயுதங்கள் மட்டுமே வருகின்றன. இதை வைத்துக் கொண்டு எந்த அளவுக்கு நீண்ட காலம் உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியும் என்றும் தெரியவில்லை. ரஷ்யா கூடுதல் படைகளை அனுப்பி தாக்குதலையும் வேகப்படுத்தினால் நிச்சயம் உக்ரைனால் சமாளிக்க முடியாது என்று சொல்கிறார்கள்.