இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா இன்று தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் முதல் இன்னிங்ஸ் முடிவில் 228 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஏழாவதாக இருந்த ரவீந்திர ஜடேஜா இந்திய அணியின் ஸ்கோர் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் என்ற நிலையில் 6 வது விக்கெட்டுக்கு ரிஷப் பந்துடன் ஜோடி சேர்ந்தார்.
6 வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 104 ரன்கள் சேர்த்த நிலையில் ரிஷப் பந்த் அவுட் ஆனார் இதனைத் தொடர்ந்து அஸ்வின் ரவிச்சந்திரனுடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா, 61 ரன்கள் எடுத்து அஸ்வின் ஆட்டமிழந்த நிலையில் 7 வது விக்கெட்டுக்கு 130 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி தனது ஆட்டத்தை டிக்ளர் செய்வதாக அறிவித்த போது ஜடேஜா ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் எடுத்திருந்தார். இது இந்திய அணியின் பேட்ஸ்மேன் வரிசையில் 7 முதல் 11 வரை உள்ளவர்கள் எடுத்த அதிகபட்ச ரன்கள் ஆகும்.
இந்திய வீரர்களில் இதற்கு முன் இந்த சாதனையை 1986 ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற போட்டியில் கபில்தேவ் ஏற்படுத்தினார், இவர் அந்த போட்டியில் 163 ரன்கள் எடுத்திருந்தார்.
கபில்தேவின் இந்த சாதனையை ரவீந்திர ஜடேஜா 36 ஆண்டுகள் கழித்து முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.