பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை மீறி கடந்த வாரம் உடுப்பி பி.யு. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்த மாணவியின் உறவினர் முகமது தவுசீஃப் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதையடுத்து உடுப்பி போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை குந்தாப்பூர் பி.யு.கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. அதில், ‘ஹிஜாப் தடையை நீக்காவிடில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து கல்லூரி நிர்வாகம் குந்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், கோலாரைச் சேர்ந்த முகமது ஷபீர் (32) என்பவர் மின்னஞ்சல் அனுப்பியதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். குந்தாப்பூர் போலீஸார் நேற்று முன் தினம் அவரை கைது செய்து, உடுப்பி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். முதல்கட்ட விசாரணையில் முகமது ஷபீர் இதே விவகாரத்தில் வேறு சில கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்களுக்கும் மின்னஞ்சல் வாயிலாக மிரட்டல் விடுத்தது தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.