மெல்போர்ன்,
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சுழல் பந்து வீச்சில் தனி முத்திரை பதித்தவருமான ஷேன் வார்னே மரணம் அடைந்தார். தாய்லாந்தில் அவரது பங்களாவில் உயிரிழந்ததாக குடும்பத்தினர் தெரிவித்து உள்ளனர். மாரடைப்பு காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 52.
ஷேன் வார்னே 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 708 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக அறியப்பட்ட ஷேன் வார்னே, 2007ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். ஷேன் வார்னேவின் திடீர் மரணம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வார்னே கடைசியாக தனது டுவிட்டரில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராட் மார்ஷ் (வயது 75) மறைவுக்கு இன்று காலை இரங்கல் தெரிவித்து செய்தி வெளியிட்டார். கடைசியாக அவர் வெளியிட்ட செய்தியில், ராட் மார்ஷ் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். நமது விளையாட்டின் ஜாம்பவானான அவர் பல இளம் சிறுவர், சிறுமிகளுக்கு ஊக்கம் ஏற்படுத்தும் வகையில் திகழ்ந்தவர். கிரிக்கெட்டில் ஆழ்ந்த கவனம் செலுத்திய அவர், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்களுக்கு பல விசயங்களை அளித்துள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய அளவில்லா நேசங்கள். சக வீரரின் ஆன்மா அமைதியில் ஆழட்டும் என பதிவிட்டார்.
இந்த சோக சூழலில், வார்னேவின் மறைவு செய்தி வெளிவந்துள்ளது. வார்னேவின் மறைவு செய்தி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வட்டாரத்திலும், உலகமெங்கிலும் உள்ள அவரது ரசிகர்கள் இடையேயும் பெரும் சோகம் ஏற்படுத்தி உள்ளது.