சென்னை கீழ்ப்பாக்கத்தில் காவல்துறை வாகனம் மோதி பெண் பலியான சம்பவத்தில், அந்தப் பெண் தாமாகவே போய் காரில் மோதி கீழே விழுவது போன்ற சிசிடிவி காட்சிகள் சிக்கியுள்ளதால், அது தற்கொலையாக இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரவாயலில் வசிக்கும் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி குமரன் என்பவரது மகன் லோகேஷ், வெள்ளிக்கிழமை அதிகாலை தந்தையின் காவல் வாகனத்தில் தாயை அழைத்துச் சென்று சென்ட்ரல் எம்.ஜி.ஆர் ரயில் நிலையத்தில் இறக்கிவிட்டு வந்துள்ளார்.
கீழ்ப்பாக்கம் அருகே வந்தபோது, சாலையின் குறுக்கே வந்த பெண் ஒருவர் மீது வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவரது பெயர் அமிர்தா என்பதும் தனியார் வங்கியில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இந்த நிலையில், விபத்திற்கு முன்பு அந்த பெண் வாகனங்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் சாலையில் நடந்து செல்வதும், டிஎஸ்பியின் வாகனம் அவரைப் பார்த்து இடது புறமாக திரும்ப முயற்சிப்பதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
அப்போது வாகனத்தின் மீது வந்து அந்தப் பெண் விழுவதும் பதிவாகியுள்ள நிலையில், பதற்றம் காரணமாக வந்து விழுந்தாரா அல்லது தற்கொலை முயற்சியா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.